ஏப்ரல் 06: முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் தொடர் விடுப்பு அடிப்படை பணிகள் பாதிப்பு.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 14 நிரந்தர பணியாளர்கள், 4 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். மேலும் துப்புரபணிகளுக்கென 16 நிரந்தர பணியாளர்களும், 24 தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த பேரூராட்சியில் செயல் அலுவலர் நிரந்தரமாகவும், நீண்ட நாட்களும் பணியாற்றுவது கிடையாது.
சமீபத்தில் இங்கு பணியாற்றிய செயல் அலுவலர் நாகராஜ் மர்மமான முறையில் இறந்தார். ஒரு செயல் அலுவலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதே போல் உடல் நலக்குறைவு, விபத்துகளால் பாதிப்பு மற்றும் மனஅழுத்தம் போன்றவைகளால் பல செயல் அலுவலர்கள் இடம் மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர். அதனால் முத்துப்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் பணியிடம் அடிக்கடி காலி இடமாக உள்ளது. இதனால் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு போன்றவை கூட சரி வர செய்து கொடுக்க முடியாத பேரூராட்சி நிர்வாகமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக குலோத்துங்கன் பொறுப்பேற்றார். இவர் வந்த நாளிலிருந்து அடிக்கடி விடுமுறை எடுப்பதால் அலுவலகத்திற்கு சரிவர வருவது கிடையாது. தற்போது சுமார் ஒரு மாதம் விடுமுறையில் உள்ளார். இதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மக்கள் பெற முடியவில்லை. இந்த பிரிவில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளாகள் பொதுமக்களிடம் முறையான பதில் கூறுவது கிடையாது. இதனால் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. 1,17,18 ஆகிய மூன்று வார்டுகளுக்கு சுமார் 4 வருடங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொது மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால் அலுவலர்கள் செயல் அலுவலர் இல்லை என்ற பதிலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சென்ற மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் 2 மற்றும் 3ம் நிலை அலுவலர்கள் பரிதவிப்பில் உள்ளனர். மொத்தத்தில் பேரூராட்சி நிர்வாகம் செயல் இழந்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment