ஜனவரி 21: நேற்றிரவு நல்லிருட்டினில் மெரினாவில் கண்ட காட்சி...
ஆங்காங்கே கூடி நின்ற கும்பல்களில் ஒன்றினில் நான் நிற்க, அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இரண்டு பெண்கள் கோஷமிட்டு போராடிய வேளையில், திடீரென்று ஓரு பெண் குரலிட்டாள்
" அண்ணா ஒரு நிமிஷம்ணா. என் ஹேண்ட் பேக் (கைப்பை) மிஸ்ஸாகிடுச்சு.
கோஷத்தை உடனடியாக நிறுத்திய இளைஞர்கள் சற்றே பதற்றமாக " ஏம்மா, நீ கவனிக்கலையா?"
"இல்லைங்கண்ணா, ஆபீசுலருந்து நேரா வந்தேன், லஞ்ச் பேக்லதான் இருந்துச்சு. மொபைல வெளிய எடுக்கறதுக்காக எடுத்தேன். திரும்ப உள்ள வச்சேனான்னு தெரியல"
"பணம் எதும் வச்சிருந்தியாம்மா"
"ஆமாணா, முன்னூறு நானூறு ரூபா இருக்கும். உள்ள என்னோட ஐடி கார்டும் இன்னொரு மொபைலும் இருக்குது. "
அப்போ உடனடியா அந்த மொபைலுக்கு ட்ரை பண்ணும்மா" என்று சொல்லி முடிப்பதற்குள் இருபதடி தூரத்தில் ஒரு சலசலப்பு.. ஓரு ஆரஞ்சு நிற கைப்பை உயர்த்திக்காட்டப்பட்டது. அருகில் வரவழைத்து அந்தப்பெண் கையில் கொடுத்து "இதுதானேம்மா, பணம் சரியா இருக்கா பாத்துக்க" என்றவரிடம்
"அதல்லாம் இருக்கும்ணா" என்று பையை பிரித்துப்பார்க்காமல் சிரித்துக்கொண்டே சொன்னார் அந்தப்பெண்.
"ஆபீசுலருந்து நேரா வரேன்னியே, சாப்பிட்டியா" அடுத்த கேள்வி.
"ஆச்சுங்கண்ணா, ரொம்ப தேங்க்ஸ்"
"வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்"!! தொடர்ந்தது போராட்டம்.
இதில் எதை உயர்வென்பது?
பையோடு பணமும் மொபைலும் கிடைக்கப்பெற்றும் , அதை திரும்பக்கொடுத்த இளைஞர்களின் நாணயத்தையா..
இல்லை அதைக்கையில் வாங்கியவுடன் சோதித்துப் பார்க்காத அந்தப்பெண்ணின் நன்றி மேலோங்கிய நம்பிகையையா.. இரண்டுக்குமே தலைவணங்கியே ஆகவேண்டும்.
எங்களைப் பொறுக்கிகள் என்று ஏளனமிட்டவருக்கு ஓரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொள்கிறோம்.
தனியாய்க் கிடைத்த #நிர்பயா மீது பாய்ந்து வெறி தீர்த்த உத்தமர்கள் வாழும் இதே திருநாட்டில்
பதட்டத்தில் வெளிறிய பெண்களை நிற்கவைத்து பயம்போக்கித் தேற்றும் பாங்குணர்ந்த பொறுக்கிகளும் வாழ்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
#தமிழர்கள்
#TNyouth
No comments:
Post a Comment