செப்டம்பர் 22: முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் பிரச்னை நடந்தால் கலெக்டர், எஸ்பி முழு பொறுப்பு.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடந்தால் கலெக்டர், எஸ்.பி. ஆகியோர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் புதியஉத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
திருவாரூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் சையது அபுதாஹிர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், விநாயகர் ஊர்வலம் ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் செல்வதால் இரு மதத்தினருக்கிடையே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டுவருகிறது. இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் 12 இஸ்லாமிய தலங்கள் உள்ளது.
இதனால், விநாயகர் ஊர்வலங்களை முறைப்படுத்தவும், இஸ்லாமியர் வாழும் பகுதி வழியாக ஊர்வலம் செல்வதை மாற்றிய மைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பாதைகள் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தகுந்த முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சிசி டிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஊர்வலம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கடந்த 15ம் தேதி பாதுகாப்பு மற்றும் ஊர்வலத்தில் பின்பற்ற பட வேண்டிய வழிகாட்டுநெறிமுறைகள் வகுத்து அளித்துள்ளார் எனவே, தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டதால் தடை விதிக்ககூடாது தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வகுத்த விதி முறைகள்படி ஊர்வலம் நடத்த வேண்டும். மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், இனி அந்தப் பகுதி வழியாக விநாயகர் ஊர்வலம் கொண்டு செல்ல தடை விதிக்கவும், அதற்கு பதிலாக வேறு பாதையை தேர்வு செய்ய போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அசம்பாவிதம் சம்பவம் நடந்தால் கலெக் டர், போலீசார் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.

No comments:
Post a Comment