ஜுலை 14: முத்துப்பேட்டை பேரூராட்சி 13வது வார்டு அதிமுக கவுன்சிலர் எம்.கே.நாசர், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு சிறுபான்மையின மீனவமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். மேலும் இப்பகுதி முத்துப்பேட்டை விரிவாக்கப்பட்ட அதிகமான வீட்டுமனைகள் உள்ள பகுதியாகவும் உள்ளது.
இதில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, கழிவு நீர், வடிகால் வசதியின்றி இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதே போல் திமிலத்தெரு பகுதியில் சாலை வசதியின்றி பாதை மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் தெருவில் சேரும் குப்பைகளை அகற்ற பேரூராட்சியில் வாகனங்கள் வந்து அள்ளி செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பையும் கழிவுமாக சேர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயநிலையில் உள்ளது. சென்ற ஆண்டு மழை காலத்தின் போது இப்பகுதியில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 15 குழந்தைகள் பாதிப்புக்குள்ளாயினர். அதே போல் ஆண்டு தோறும் நடைபெறும் ரம்ஜான் பண்டிகையை யொட்டி இப்பகுதி அரபு ஷாகிப் பள்ளிவாசலில் கந்தூரி விழாவும் நடைபெற இருக்கிறது.
இந்த ஊர்வலம் செல்லும் பாதையான பேட்டை சிமென்ட் சாலை முற்றிலும் சேதமாகி உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்கவும் திமிலத்தெரு பகுதியில் சாலை வசதியும் கழிவு நீர் வடிகால் வசதியும், அதே போன்று அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் நாசர் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகலை முதலமைச்சரின் தனிபிரிவுக்கும் அனுப்பியுள்ளார்.


No comments:
Post a Comment