ஜுலை 02: முத்துப்பேட்டையில் சாலை ஓரத்தில் காரை நிறுத்திய தி.மு.க பிரமுகரின் சகோதரரை காவல் நிலையத்திற்கு சட்டையை கிழித்து இழுத்து சென்ற ஆயுதப் படை போலீஸ். உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராமஜெயம் இவரது சகோதரர் கன்னன். இவர் நேற்று நண்பர் சுரேசின் காரில் சென்று முத்துப்பேட்டை பழைய பேருந்துக் நிலையத்தில் உள்ள பூக்கடையில் பூ வாங்கி கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த ஆயுதப்படை போலீஸ் செல்வகுமார் காரை எடுக்கும் படி கன்னனிடம் கூறினார். அதற்கு கன்னன் பூ வாங்கிவிட்டு எடுத்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு ஆயுதப்படை போலீஸ் செல்வகுமார் கன்னனிடம் கோபமாக மிரட்டலுடன் உடனே காரை எடுக்க வேண்டும் என்று கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்பொழுது ஆயுதப்படை போலீஸ் செல்வகுமார், கன்னனின் சட்டையைப் பிடித்து கிழித்து பழைய பேருந்து நிலையத்திலிருந்து கூட்டமாக காணப்பட்ட மன்னார்குடி சாலை வழியாக காவல் நிலையத்திற்;கு இழுத்து சென்றார். இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களிடயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தி.மு.க பிரமுகர் தம்பி கன்னனை போலீசார் ஒருவர் சட்டையைப் பிடித்து இழுத்து சென்ற சம்பவம் முத்துப்பேட்டை முழுவதும் உள்ள உறவினர்கள் மற்றும் தி.மு.கவினர்களிடையே தகவல் பரவியது.
இதனை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் தி.மு.கவினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அப்பொழுது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் லத்தியைக் காட்டி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
தகவல் : நிருபர் மு.முகைதீன் பிச்சை


No comments:
Post a Comment