ஜுன் 28: பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கடைகள், 2 வீடுகள் எரிந்து சாம்பல்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரின் முக்கிய வர்த்தக பகுதி பெரியகடைத் தெரு. இங்கு வீரமணி என்பவர் காஸ் ஸ்டவ் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீரமணி ஸ்டவ் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் கடை முழுவதும் பற்றி தீப்பற்றியது. இதையடுத்து காஸ் சிலிண்டர்கள் வெடித்து கடையின் கான்கிரீட் கூரையை பிய்த்துக் கொண்டு வெளியே பறந்து வந்து விழுந்தன. சத்தம் கேட்டு அப்பகுதி வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
தீ மளமள வென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) செல்வராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து ஒரத்தநாடு, பேராவூரணி, திருமக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயைஅணைத்தனர். இந்த தீ விபத்தில் காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் கடை, ஒரு பெட்டிக் கடை, தையல் கடை, ஹோட்டல், தயிர் டிப்போ, ரெடிமேட் கடை, வளையல் கடை, பிளாஸ்டிக் கடை, மளிகை மற்றும் வத்தல் கடை என 9 கடைகளும், அய்யப்பன், விக்ரமன் ஆகியோரின் கூரை வீடுகளும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் காஸ் ஸ்டவ் கடை உரிமையாளர் வீரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின. சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை ஆர்டிஓ அரங்கநாதன், டிஎஸ்பி (பொ) பிச்சை, தாசில்தார் சேதுராமன், நகராட்சித் தலைவர் ஜவஹர் பாபு ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணியை விரைவுபடுத்தினர். இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment