ஆகஸ்ட் 31: முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது27). இருவரும் துபாயில் வேலை பார்த்து வருகிறார்கள். ராஜ்குமாருக்கும், நாகை மாவட்டம் தகட்டூரை சேர்ந்த கணேசன் மகள் ஹேமாவிற்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.
இதையொட்டி பெண்ணை அழைப்பதற்காக நாச்சிக்குளத்தில் இருந்து பக்கிரிசாமி மற்றும் உறவினர்கள் 17 பேர் ஒரு வேனில் தகட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை நாச்சிக்குளத்தை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி சென்றார்.
இடும்பாவனம் வேன் வாடியக்காடு அருகே ஒரு திருப்பத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த மணமகனின் தந்தை பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பிரியா (27), முத்துகிருஷ்ணன் மகன் தாரீஸ்வரன் (9 மாத குழந்தை), திருச்சியை சேர்ந்த பொன்னீஸ்வரி (54), மேரிமல்லிகா(55), மேபில்(31), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் (58), தங்கம்மா (34), ரகுபதி(48), வேதாரண்யத்தைச் சேர்ந்த ராமன் மகள் துளசி (3), தம்பிக்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் (46), தோப்புதுறையைச் சேர்ந்த கலாராணி (30), காங்கேயத்தை சேர்ந்த கமலா(35), எடையூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சிவசங்கிரி (31) உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதைதொடர்ந்து 3 பேர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தை அடுத்து வேன் டிரைவர் குமார் தப்பி ஓடிவிட்டார். அவர் செல்போன் பேசியபடி ஓட்டியதால் வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர் குமாரை தேடி வருகிறார்கள். விபத்தில் காயம் அடைந்து திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் நடராசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் சுப்பு, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
புகைப்படங்கள்: தாவுத் கான்





No comments:
Post a Comment