
பிப்.29- சிரியாவில் அதிபர் பஷர்- அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது கலவரமாக மாறியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவம் ஏவிவிடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
தற்போது ஹோம்ஸ் நகரில் போராட்டம் வலுத்து வருகிறது. அவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சிரியா போராட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7,500 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சிலின் அரசியல் துறை செயலாளர் லியன் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.
அங்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 பேர் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபகாலமாக ஹோம்ஸ் நகரில் போராடும் மக்களை ராணுவம் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறது. அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்களை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 4 நிருபர்கள் மற்றும் போட்டோ கிராபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதற்கு பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சிரியா அதிபர் ஆசாத் ஒரு 'போர்க் குற்றவாளி' என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். கலவரத்தில இதுவரை 7500 பேர் பலியானதாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள தகவலை சிரியா மறுத்துள்ளது. உள்நாட்டு போரில் 2,433 பொதுமக்களும், 1,345 ராணுவ வீரர்களும் பலியானதாக தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment