பிப்ரவரி 04: என்னோடு வேலை பார்க்கும் சகோதரர் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தைச் சேர்ந்தவர். கடந்த 4 வருடங்களாக சொந்த நாட்டைத் துறந்து துபையில் பணி செய்து வருகின்றார்.
இந்தியாவிற்கு விடுப்பில் சென்று தனது திருமணத்தை முடித்து திரும்பினார். அங்கு அவர் தனது மனைவியுடன் வாழ்ந்த காலம் 28 நாட்கள் மட்டுமே. மிக வேகமாகக் கழிந்த விடுப்பு, அன்பு மனைவியிடமிருந்து பிரிந்தது போன்றவையால் கண்ணீருடன் பறந்தார் விமானத்தில். மீண்டும் வேலையில் சேர்ந்தாகிவிட்டது.
விடுப்பு மிகக் குறைவு என்றாலும் அவர்கள் வாழ்ந்த குறுகிய கால வாழ்க்கைக்கு அடையாளமாய் அவரின் அன்பு மனைவி மகிழ்ச்சியான செய்தியை தொலைபேசியில் தெரிவித்தாள். வெளிநாடுகளில் வாழும் நமக்கு சந்தோஷமும், துக்கமும் தொலைபேசியில்தானே. அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரிடமும் கூறி அங்கலாய்த்தார்.
நண்பரின் சந்தோஷத்தில் பங்கெடுப்பது நமது கடமையல்லவா? விடுவோமா என்ன? அன்றே பார்ட்டி வேண்டும் என்று அடம் பிடித்து, மதிய உணவை ஒரு பெரிய ஹோட்டலில் ஆர்டர் செய்து, சாப்பிட்டு, சிரித்து, மகிழ்ந்து, கிண்டலடித்து குதூகலமாக கழிந்தது அன்றைய பொழுது. நாட்கள் நகர்ந்தன. 4 மாதம் போனதே தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்றும், துஆ செய்யுமாறும் கூறினார்.
சிறிது நேரத்தில் தன் குழந்தை பிறந்து இறந்து விட்டது என்ற அதிர்ச்சி தகவலை கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீரோடு சொன்னார். நமக்கும் அந்தத் துயரின் வலி தெரியுமல்லவா? ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார். அவரது விசா முடிந்திருந்தது. புதுப்பித்த பிறகுதான் செல்ல முடியும் என்று கம்பெனியில் சொல்லி விட்டபடியால் கண்ணீரையும், கவலையையும் தன்னுள் போட்டுப் புதைத்துக் கொண்டு வேலையைத் தொடந்தார்.
ஆனால் பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பார்களே, அது போல் தொடர்ச்சியாக சோதனை அவரைத் தொடர்ந்தது. தன் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லை, நான் போயாக வேண்டும், என்ன செய்வது என்று புலம்பிக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் கழிந்தன. நேற்று காலையில் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதாம், அதனால் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொல்லி விட்டார்களாம் என்று அவர் சொன்னபோது சுற்றி அமர்ந்திருந்த எங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. அல்லாஹ் உதவி செய்வான், கவலைப்பட வேண்டாம், துஆ செய்வோம் என்று கூறிவிட்டு வெளியில் சிறிது வேலை இருந்ததால் சென்று விட்டேன்.
ளுஹர் தொழுகை முடிந்து வந்த போது எனது Department-ல் யாரும் இல்லை. ஒய்வெடுக்கும் அறையில் இருந்து யாருக்கோ ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் சப்தம் வந்தது. வேகமாக அங்கே போய்ப் பார்த்தேன். அந்தச் சகோதரனைச் சுற்றி அனைவரும் நிற்க, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. என்ன என்று கேட்ட போது ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர் அழுது கொண்டே கூறிய வார்த்தையை ஜீரணித்துக் கொள்வதற்கு சில நிமிடங்கள் தேவைபட்டது. அவருடைய துணைவி உலகை விட்டுப் பிரிந்து விட்டாளாம்! இதனைக் கேட்டவுடன் என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரைப் பொறுத்தவரை உடனே ஊருக்குச் செல்ல வேண்டும். அவ்வளவுதான். கம்பெனியின் மனிதவளத் துறை மேலாளரிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். விசா முடிந்து விட்டது, புதுப்பிக்க அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு வேகமாக முயற்சி செய்தாலும் 12 மணி நேரம் தேவைப்படும் என்றார். நான் அவரிடம் உரையாடிய பொழுது பிற்பகல் 3 மணி. அதற்கான முயற்சிகள் ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் நாளை காலை 11 மணிக்கு விமான டிக்கட் புக் செய்தாகி விட்டது என்ற தகவல் கிடைத்தது.
ஒரு நாள் அந்த ஜனாஸா (அவருடைய மனைவி) இவருக்காக காத்திருக்க வேண்டும். அங்கு போய் மனைவியின் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா என்று இவர் இங்கே கிடந்து தவிக்கிறார். உண்மையில் இந்த வெளிநாட்டு வாழ்க்கை ச்சீசீசீசீ… என்று காறி உமிழும் அளவிற்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது.
கடைசியாக அவருடைய மனைவி உயிர் பிரியும் சிறிது நிமிடத்திற்கு முன்னால் இவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறாள். அவள் இவரிடம் கடைசியாக பேசிய வார்த்தை என்ன என்று அவர் சொன்ன போது, என்னை அறியாமல் எனது கண்கள் கலங்கியது. “இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா?” (அபீபி நஹீ ஆயேகா?) என்பதுதான் அவள் கூறிய இறுதி வார்த்தை! “என்னால் அவளது கடைசி ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே…” என்று கதறிக் கொண்டே அவர் இப்பொழுது எங்களை விட்டுச் சென்று கொண்டிருக்கிறார் விமானத்தை நோக்கி.
வலசை ஃபைஸல்
Thanks: ADIRAIPIRAI
No comments:
Post a Comment