ஜனவரி 25: சவுதி அரேபியாவின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் பின் அஸீஸ் அல் சௌத், மறைந்த மன்னரின் கொள்கைகளையே தான் பின்பற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் வெள்ளிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரம் ஒரு மணிக்கு காலமானதாக அரச தொலைக்காட்சி அறிவித்தது.
இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைய மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஜனாஸாத் தொழுகை இடம்பெற்றது. இதில் பன்னாட்டுத் தலைவர்கள் பங்குபெற்றனர்.
புதிய மன்னரின் உடல் நிலையும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. பக்கவாத நோயினால் ஒருமுறை அவர் தாக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக அவரது இடது கையில் குறைந்த அளவுக்கே செயல்பாடு உள்ளது என்றும் அறியப்படுகிறது.
புதிய மன்னர் சல்மான் பின் அஸீஸ் அல் சௌத்
மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சல்மான் பின் அல் அஸீஸ் சௌத், காலஞ்சென்ற மன்னர் அப்துல் அஜீஸின் இளைய மகனும் தனக்கு சகோதரர் முறை கொண்டவருமான முக்ரின் பின் அப்துல் அஸீஸை பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி அங்கு அதிகாரபூர்வமாக துக்கம் அனுஸ்டிக்கப்படும் காலம் என்பது அனுமதிக்கப்படாத ஒன்று. மன்னர் காலமானாலும் அலுவலகங்கள் மூடப்படவில்லை, கொடிகளும் கொடிக்கம்பத்தின் உச்சியிலேயே பறந்தன.
எனினும் பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸின் மரணத்தை முன்னிட்டு நாற்பது நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment