ஜூலை 09: ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் இருந்து ஒரு ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் விமான ஊழியர்கள் உள்பட 130 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.15 மணி அளவில் பாகிஸ்தான் வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காக்பிட் பகுதியில் இருந்து அபாய விளக்கு எரிவதை விமான கேப்டன் பார்த்து விட்டார்.
உடனே சுதாரித்த அவர் விமானத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை ஆய்வு செய்தார். அப்போது விமானத்தில் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே விமானத்தை அவசரமாக தரை இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் பாகிஸ்தான விமான நிலைய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டார். அதை தொடர்ந்து விமானத்தை சிந்து மாகாணத்தில் உள்ள நவாப் ஷா விமான நிலையத்தில் தரை இறக்க அனுமதி கிடைத்தது.
அதை தொடர்ந்து அதிகாலை 3.37 மணிக்கு அங்கு பத்திரமாக விமானம் தரை இறக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 130 பயணிகளும் உயிர் தப்பினர். இந்த தகவலை பாகிஸ்தான் விமான துறையின் செய்தி தொடர்பாளர் பர்வேஷ் ஜார்ஜ் தெரிவித்தார். இதை இந்திய விமான துறையும் உறுதி செய்தது.
இதற்கிடையே ஏர் இந்தியா விமானம் நவாப் ஷாவுக்கு மற்றொரு விமானத்தை உடனடியாக அனுப்பியது. அதை தொடர்ந்து கோளாறு ஆன விமானத்தில் இருந்த பயணிகள் இதில் ஏற்றி பத்திரமாக டெல்லி அனுப்பப்பட்டனர்.
No comments:
Post a Comment