ஜுலை 24: தென் ஆபிரிக்கா கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ‘ஹாஸிம் முகம்மட் அம்லா’ இன்று உலக கிரிக்கட்டில் பேசப்படும் ஓர் வீரர். 29 வயதுடைய ஹாஸிம் அம்லா, தென் ஆபிரிக்காவில் டேர்பன் (Durban) நகரில் 1983 மார்ச் மாதம் 31ம் திகதி பிறந்தார்.
குஜராத்தைப் பிறப்பிடமாகக் கொன்ட இவரது பெற்றோர், தென் ஆபிரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தனர். வலக்கை துடுப்பாட்ட வீரரான ஹாஸிம் அம்லா, தனது முதலாவது டெஸ்ட் போட்டியை 2004, நவம்பர் 24ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை 2008, மார்ச் 9ம் திகதி பங்களாதேஷ் இற்கு எதிராக விளையாடியிருந்தார்.
இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹாஸிம் அம்லா, 4600 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவற்றுள் 16 சதங்கள் உள்ளடங்கும். அவற்றுள் 2 இரட்டைச் சதங்களும் 23 அரைச் சதங்களும் உள்ளடக்கம்.
அதி கூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையாக ஆட்டமிழக்காத 311 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். இந்த ஓட்ட இலக்கை நேற்று, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்டத்தில் பெற்றிருந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் தென் ஆபிரிக்காவின் எந்தத் துடுப்பாட்ட வீரரும் பெற்றிருக்காத அதிகூடிய 311* ஓட்டங்களைப் பெற்று, தென் ஆபிரிக்கா கிரிக்கட்டில் ஓர் சரித்திரம் படைத்திருக்கின்றார். இவர் இந்த 300 ஓட்டங்களைப் பெற்றபோது லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டியைப் பாரத்திருந்த சுமார் 23,000 உள்ளங்கள் எழுந்து நின்று கரகோசித்து இவரது இச் சாதனைக்கு உற்சாகமளித்தனர்.
ஐம்பத்தி ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹாஸிம் அம்லா விளையாடியுள்ளார். இவற்றுள் 9 சதங்களும் 18 அரைச் சதங்களும் உள்ளடக்கம்.
தனது நாட்டு விளையாட்டு ஆடையில் பொறிக்கப்பட்ட மதுபான (Castle) விளம்பரத்திற்காக அவ் ஆடையினை அணிவதைத் தடுத்தார். இதனால் தென் ஆபிரிக்கா கிரிக்கட்டிற்கும் அம்லாவிற்கும் வருத்தம் இருந்தது.
‘என்னால் சிறப்பாக ஆட முடியும். விரும்பினால் இந்நாட்டிற்காக ஆடுவதற்கு வாய்ப்புத் தாருங்கள். இல்லாவிட்டால் நான் அணியில் இருந்த நின்றுவிடுகிறேன். அதற்காக இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கும் மதுபான விளம்பரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிய முடியாது’
என உறுதியுடன் கூறி இருந்தார்.
‘ குறித்த விளம்பரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிவதற்கு நாங்கள் கூடுதல் ‘ஸ்பொன்சர்’ தருகிறோம்’
என்றது குறித்த நிறுவனம். எனினும்
‘எனக்கு எனது மார்க்கமே முக்கியம்’
எனக்கூறி மதுபான ஆடையை அணிவதில் இருந்து தவிர்ந்தார்.
இதனால் ஏனைய வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைப் பார்க்கிலும் குறைந்த தொகையே இவருக்கு கிடைக்கின்றது. இவருக்காக ‘காஸ்டில்’ மதுபான விளம்பரமில்லாத ஆடைகளை தென் ஆபிரிக்கா கிரிக்கட் தற்பொழுது வழங்கி வருகின்றது. இவற்றையே இவர் தற்பொழுது அணிந்து விளையாடி வருகின்றார்.
இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவிற்கும் இடையில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் (2006, ஓகஸ்ட் 7ல்) ‘டென் ஸ்போர்ட்ஸ்’ (Ten Sports) யின் நேரடி வர்ணனையாளராக இருந்த ‘டீன் ஜோன்ஸ்’, அம்லாவை ஓர் ‘தீவிரவாதி’ என தனது வர்ணணையில் குறிப்பிட்டிருந்தார். முழுமையான தாடி வைத்து ஓர் உண்மை முஸ்லிம் வீரராகக் காட்சி தந்த அம்லாவின் எளிமையும் திறமையும் டீன் ஜோன்ஸ் இற்குப் பிடிக்கவில்லை. அல்லது ஓர் காழ்ப்புணர்வில் அவ்வாறு கூறியிருந்தார்.
அம்லா ஓரு பிடியைப் பெற்ற போதே இவ்வாறு கூறி இருந்தார். வர்த்தக விளம்பரத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு பிடியை அம்லா பெற்றிருந்தார். இதற்கும் ‘தீவிரவாதி மற்றுமொரு பிடியைப் பெற்றுள்ளார்’ என கூறியிருந்தார். உலக பிரசித்தி பெற்ற குறித்த தொலைக்காட்சியில் ஓர் நேரடி வர்ணனையாளரின் இச்செயலை போட்டியைப் பார்த்துக் கொன்டிருந்த அனைவரும் கண்டித்தனர். எனைய ஊடகங்களும் விமர்சித்திருந்தன. பின்னர் குறித்த தவறுக்காக டீன் ஜோன்ஸ் மன்னிப்புக் கோரி இருந்ததும் பின்னர் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் இவரை விலக்கியதும் குறிப்பிடத்தக்கது.
‘தான் உண்டு-தன்பாடு என்று’ ஆடம்பரமில்லாமல் எளிமையாக களத்தில் ஆடும் இவர், தென்ஆபிரிக்கா அணியை டெஸ்ட் போட்டிகளிலும் ஓருநாள் போட்டிகளிலும் அண்மைக்காலமாக பிரகாசிக்கச் செய்து வருவது அம்லாவுக்கான ஓர் தனிச்சிறப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஆம், இன்றும்கூட இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment