மே 08: அணுகுண்டுகளை விட அதிகமான அச்சுறுத்தலை ப்ளாஸ்டிக் பொருட்கள் எழுப்புவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ப்ளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைச் செய்யக்கோரி கருணா சொசைட்டி ஃபார் அனிமல் அண்ட் நேச்சர் என்ற அரசு சாரா அமைப்பு சமர்ப்பித்த பொது நல மனுவின் மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ப்ளாஸ்டிக் கேரி பேக்குகள் விலங்கினங்களுக்கும், சுற்றுசூழலுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கருணா சொசைட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
36 பசுக்களை பரிசோதித்த பொழுது அவற்றில் 32 பசுக்களின் வயிற்றில் 50 கிலோ வீதம் ப்ளாஸ்டிக் பேக்குகளை கண்டுபிடித்ததற்கான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ப்ளாஸ்டிக் பொருட்களை தடைச் செய்யாத நிலையில் அதன் தயாரிப்பாளர்கள் அவற்றை சேகரித்து மறுசுழற்சி(recycle) செய்யும் திட்டத்தை ஏற்படுத்தவேண்டிய நிலைமை உருவாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

No comments:
Post a Comment