செப்டம்பர் 19: திருச்சி விமான நிலையத்திலிருந்து பயணியை ஏற்றிவரும்போது கார் மீது லாரி மோதி டிரைவர் பலி.
அதிராம்பட்டினம் நெசவுத்தெருவை சேர்ந்தவர் காலஞ்சென்ற வாத்தியப்பா என்கிற அப்துல் ரஹ்மான். இவரது மகன் ஏ.ஆர் ராஜிக் அஹமது ( வயது 35 ). சொந்தமாக வாகனம் வைத்துள்ளார். இன்று அதிகாலை தனது வாகனத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனது உறவினரை ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பினார். வாகனம் ஒரத்தநாடு அருகே வந்த போது டயர் பஞ்சராகி இருப்பதை கவனித்தவர் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பஞ்சர் வீலை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதே சாலையில் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி படுவேகமாக சென்ற லாரி ஒன்று ராஜிக் அஹமது மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜிக் அஹமது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் மற்றும் நெசவுத்தெரு மஹல்லாவாசிகளுடன் இணைந்து இறந்த உடலை அதிராம்பட்டினம் கொண்டு வரும் முயற்சியில் ஒரத்தநாட்டில் முகாமிட்டுள்ளார். பிரத பரிசோதனைக்கு பிறகு உடல் இன்று காலை 10 மணிக்கு உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறந்த ராஜிக் அகமதுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் லாரியுடன் தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அதிகாலை நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிரை பகுதி பொதுமக்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் லாரியுடன் தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிரை இளைஞர்கள் காவல்துறை உதவியுடன் தப்பிச்சென்ற லாரியை மடக்கி பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதற்காக இளைஞர்கள் குழுவினர்களாக பிரிந்து சென்று நாளா திசைகளிலும் தேடிச்சென்றனர்.
இதில் திருவோணம் சாலையில் கக்கரைக்கோட்டை என்ற கிராமத்தின் அருகே சிமெண்ட் லோடுடன் நின்றுகொண்டிருந்த லாரியின் முன்புற பகுதி தேசமடைந்து இருப்பதை கண்டனர். முகப்பு பகுதியில் இரத்த கரை படிந்திருப்பதை கண்டுபிடித்தனர். மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரி இதுதான் என தெரியவந்தது. ரெட்டிப்பட்டிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு இராமநாதபுரம் செல்ல இருந்ததும் தெரியவந்தது. லாரியின் முன்புற பகுதி டயரில் உரசி தீப்பற்றியதால் லாரியை விட்டுவிட்டு ஓட்டுனர் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் லாரியை ஒரத்தநாடு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உடல் பிரத பரிசோதனை முடியும் வரை ஒரத்தநாடு அரசு மருத்துவனையிலும், காவல்நிலையத்திலும் அதிரை இளைஞர்கள் சோகத்துடன் குழுமி இருக்கின்றனர். சம்பவ இடத்தில முகாமிட்டுள்ள பேராசிரியர் செய்யது அஹமது கபீர் பிரத உடலை பெற வேண்டிய பணிகளை உடனிருந்து உதவி வருகிறார்.
தகவல்: அதிரை.நியூஸ்







No comments:
Post a Comment