முத்துப்பேட்டையில் ஆயுதப்படை போலீசாரின் அடாவடி நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்களும், வியாபாரிகளும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
முத்துப்பேட்டையில் பல ஆண்டுகளாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி ஏற்படும் மோதலால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். சமீபகாலங்களில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலர் இறால் பண்ணைகள், வியாபார நிறுவனங்கள் நடத்தி வருவதாலும், பலரும் வெளிநாடுகளில் வேலை செய்வதாலும் பிரச்னைகள் குறைந்து தற்போது அமைதிநிலவுகிறது. ஆனால் தற்சமயம் இப்பகுதியில் ஒரு சில போலீசாரால் தற்போது சிறு, சிறு சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டுவருகிறது. இது நாளடைவில் பெரிய கலவரமாக உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள் மத்தியில் இருந்த இரு பிரிவினர் மீது இருந்த அச்சம் விலகி தற்போது போலீசார் மீது அச்சம் திரும்பியுள்ளது. இதற்கு உதாரணம் சமீப காலமாக ஆயுதப்படை போலீசாரால் தொடர்ந்து இப்பகுதியில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சமீபத்தில் தில்லைவிளாகம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பெண்கள் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசாரே பெண்களிடம் சில்மிசம் செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல சமீபத்தில் பழைய பேருந்து நிலையத்தில் அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சஞ்சய் என்பவர் தனது டூவீ லரை நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற ஆயுதப்படை போலீசார் அவரது டூவீ லரின் பிளக்கை எடுத்து எறிந்தனர். இது பற்றி கேட்ட ஆசிரியரை மிரட்டி னர். மேலும் முத்துப்பேட்டை செம்படவான்காடு கேட் அருகே கூலி வேலைக்கு செல்ல நின்றிருந்த இளைஞர் களை ஆயுதப்படை போலீசார் தரைக்குறைவாக பேசி மிரட்டினர். அப்போது இளைஞர்கள் ஆயுதப்படை போலீசாரை தாக்கும் சூழ்நிலை உருவானது. மேலும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை வாசலில் பாதுகாப்புக்குநிற்கும் ஆயுதப்படை போலீசார், அங்கே வரும் பெண்களிடம், அவர்களின் செல்போன் எண்ணை கேட்பதும், தங்கள் எண்ணை அவர்களிடம் கொடுத்தும் வம்பிழுத்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி திமுக பிரமுகரின் சகோதரர் கண்ணன் என்பவரை சாலை ஓரத்தில் காரை நிறுத்தியதற்காக சட்டையை கிழித்து போலீஸ் ஸ்டேஷன் வரை ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வகுமார் இழுத்து சென்ற சம்பவம் நடந்தது.
கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே போலீசார் குடியிருப்பு அருகே ஆயுதப்படை போலீசார் வேனை நிறுத்திக் கொண்டு பள்ளி துவங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் மாணவிகளுக்கு சைகைகாட்டி வருவது மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. விரைவில் ரம்ஜான் பண்டிகை, கந்தூரி ஊர்வலம், விநாயகர் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியநிலையில் ஆயுதப்படை போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பொது மக்கள், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு பொது மக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.


எங்களுக்கு சொந்தமான எஞ்சின் ஒன்று திருடர்கள் எடுத்து சென்றுவிட்டனர் எங்கள் கிராமத்தினரின் உதவியால் நாங்கள் திருடனையும் எஞ்சினையும் பிடித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம் ஆனால் இன்று வரைக்கும் எந்த ஒரு பதிலும் அளிக்கவும் இல்லை அந்த திருடனை விட்டுவிட்டனர் உடனடியாக இந்த பிரச்சனையை முடிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteமுத்துப்பேட்டை காவல்துறை அதிகாரிகளை உடனடியாக வேலையை விட்டு தூக்கவூம்