ஜுன் 11: முத்துப்பேட்டை அருகே பெண் தற்கொலை வழக்கில் தேடப்பட்ட கணவர் சிங்கப்பூரில் கடலில் குதித்து தற்கொலை.
முத்துப்பேட்டை அருகே பெண் தற்கொலை வழக்கில் தேடப்பட்ட கணவர் சிங்கப்பூரில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரை சேர்ந்தவர் ஜெயபால் விவசாயி. இவரது மகள் பிரியதர்ஷினி (25). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், விமான பணிப்பெண்ணுக்கான பயிற்சியும் முடித்திருந்தார்.
இவருக்கும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கரிக்காடு கிராமத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச தலைவர் ஜெயராமன் மகன் தமிழ் மணிக்கும் (30) கடந்த பிப்ரவரி 2ல் திருமணம் நடைபெற்றது. தமிழ் மணி சிங்கப்பூரில் கப்பல் கட்டும் தளத்தில் பணி புரிந்து வந்தார். திருமணம் முடிந்த 10 நாளில் தமிழ் மணி சிங்கப்பூர் சென்று விட்டார்.
சில நாட்களில் தமிழ் மணிக்கு ஏற்கனவே, பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ள தகவல் பிரியதர்ஷினிக்கு தெரிய வந்தது. இதனால் பிரியதர்ஷினி வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய் து கொண்ட கணவனுடன் தொடர்பு கொண்டு கேட்டு கதறி அழுதார். அப்போது, தமிழ் மணி முதல் மனைவியான சத்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அதை விரும்பாத பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் தமிழ் மணி பிரியதர்ஷிணியை 2வதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. பல கனவுகளுடன் துவங்கிய திருமண வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய மோசடியால் பிரியதர்ஷினி மனமுடைந்தார். அவரது பெற்றோர் நிலைகுலைந்தனர்.
இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி பிரியதர்ஷினிக்கு, தமிழ் மணியின் முதல் மனைவி சத்யா போன் செய்து மிரட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரியதர்ஷினி அன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது பெற்றோர் துடித்தனர். இது குறித்து பிரியதர்ஷினி தந்தை ஜெயபால் எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் முருகன், ஆர்.டி.ஓ செல்வசுரபி ஆகியோர் விசாரணை நடத்தினர். மனைவி இறந்தததால் சிங்கப்பூரில் இருந்து தமிழ் மணி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது போலீசார் அவரை அழைத்து விசாரித்து விட்டு விட்டு விட்டனர். அவர் மீதோ, அவரது பெற்றோர் மீதோ போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பயன்படுத்தி தமிழ் மணி சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரியதர்ஷினியின் உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியல் செய்தனர். அதன் பிறகு எடையூர் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, தமிழ் மணி, அவரது தந்தை ஜெயராமன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் மீது பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஜெயராமனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தாய் ராஜேஸ்வரி உடல் நலத்தை காரணம் காட்டி திருவாரூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். தமிழ் மணியை சிங்கப்பூரிலிருந்து இந்தியா கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ் மணியின் பாஸ்போர்ட் எண்ணை அனைத்து விமானநிலையங்களுக்கும் அனுப்பி, அவர் நாடு திரும்பும் போது கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் மணி கடந்த 5ம்தேதி சிங்கப்பூரில் கப்பல் கட்டும் தளத்தில் 100 அடி உயரம் உள்ள கிரேனில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் விமானம் மூலம் கடந்த 8ம் தேதி இரவு சொந்த ஊரான பட்டுக்கோட்டை கரிக்காட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மறுநாள் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் மணியின் தந்தை ஜெயராமன் ஜாமீனில் வந்து இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண் டார்.
இதுக் குறித்து மாவட்ட திமுக பிரதிநிதி அன்பழகன் கூறுகையில், பிரியதர்ஷினி இறந்ததும் வழக்குப் பதிவு செய்த எடை யூர் போலீசார், உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழ் மணியை கைது செய்திருக்கலாம். அவர் சிங்கப்பூருக்கு தப்பி செல்ல வாய்ப்பு இருந்திருக்காது. அவரது தற்கொலையையும் தடுத்திருக்கலாம் என்றார்.



No comments:
Post a Comment