ஜுன் 01: முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி மெயின் ரோடு பவுன்டடி பகுதியில் வசிப்பவர் நெய்னா மூஸா மகன் அப்துல் வகாப்(58). இவர் தன் வீட்டு வாசலில் பெட்டி கடை நடத்தி வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவரது மகள் சர்புனிஷாவிற்கு இன்னும் இரண்டு தினங்களில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக மிகவும் சிரமம்பட்டு பணம் மற்றும் நகைகளைச் சேகரித்து வீட்டில் வைத்து கொண்டு திருமண வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அப்துல் வகாபின் குடும்பத்தினர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக முத்துப்பேட்டைக்கு சென்றிருந்தனர்.
அப்துல் வகாப் கடையையும் வீட்டையும் நேற்று மதியம் பூட்டிவிட்டு அருகே உள்ள வயலில் மாடு பிடிக்க சென்றிருந்தார். பின்னர் அப்துல் வகாப் மற்றும் குடும்பத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்கம் உள்ள வேப்ப மரத்தின் வழியாக வீட்டின் மீது ஏரி வீட்டின் பின்பக்கம் ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கி பீரோவில் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகளும், 52 ஆயிரம் ரொக்க பணமும் திருடி சென்றிருப்பதும் பின்னர் மர்ம நபர்கள் பின் பக்க பதவை திறந்துக் கொண்டு தப்பி சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து அப்துல் வகாப் எடையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவம் நடந்த பகுதியைப்பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார். பட்டபகலில் ஒரு ஏழை குடும்பத்தில் திருமணத்திற்காக நகை, பணம் கொள்ளை போன சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் : நிருபர் மு.முகைதீன் பிச்சை


No comments:
Post a Comment