மே 21: மாநிலத்தில் முதல் இடம் வருவேன் என்று எனக்கே தெரியாது. அதுதான் இப்போ எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தந்தையை இழந்த அரசு பள்ளியில் படித்த மாணவி வைஷ்ணவி கூறினார். தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மூன்று பேர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் படித்த மாணவி வைஷ்ணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலாம் இடம் பிடித்து அரசு பள்ளிகளுக்கும், அரசிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
தமிழில் 99, மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து 499 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் மாணவி வைஷ்ணவி.
"என்னை பொறுத்தவரை நான் நல்லாத்தான் படிச்சேன். நல்லா தேர்வு எழுதினேன். மாநிலத்தில் முதல் இடம் வருவேன் என்று எனக்கே தெரியாது. அதுதான் இப்போ எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அப்பா இல்லை. அம்மாதான் இருக்கிறார். அவர் கொடுத்த நம்பிக்கையும், தைரியமும்தான் என்னை மாநிலத்தில் முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
அப்பா இல்லாத குறையை நீதான் நிறைவேற்றணும். அவரது ஆசையையும் நீதான் நிறைவேற்றணும் என்று சொல்லி தைரியம் கொடுப்பார். அம்மா சொன்ன அந்த லட்சியத்தோடு நான் படிச்சதால்தான் என்னால் முதலிடம் பிடிக்க முடிந்தது.
அரசு பள்ளியில் படித்தால் முதலிடம் வரமுடியாது என்பதெல்லாம் கிடையாது. எங்கே படிக்கிறோம் என்பதல்ல எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அரசு பள்ளியிலும் திறமையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு மேலும் மேலும் படிப்பதற்கு தூண்டுகோலாக இருந்தது. ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது நான் நன்றாக கவனிப்பேன். அதன்பிறகு வீட்டில் வந்து நான் அந்த பாடத்தை அன்றைக்கே படித்து முடித்துவிடுவேன். எக்ஸாம் டைமில்தான் நான் அதிக நேரம் படிப்பேன்.
என்னுடைய அப்பா, அம்மாவிடம் பிள்ளைய நல்லா படிக்க வச்சிடுன்னு சொல்லியிருக்கிறார். அவர் ஆசையை நிறைவேற்றும் விதமாக நான் பன்னிரண்டாம் வகுப்பிலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்து மருத்துவ படிப்பு படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதுதான் என் லட்சியம். நான் தொடர்ந்து படித்த பட்டுக்கோட்டை அரசு பள்ளியில்தான் படிக்கப்போகிறேன் என்றார்" வைஷ்ணவி.


No comments:
Post a Comment