ஏப்ரல் 28: முத்துப்பேட்டையை சேர்ந்த பயணி அரசு பஸ்சில் கடத்துவதாக செய்த புகாரால் பரபரப்பு.
முத்துப்பேட்டை பஸ் நிலையத்தில் இறக்காமல் சென்றதால், தன்னை கடத்தி செல்வதாக பயணி போன் மூலம் போலீசுக்கு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பஸ்சை மடக்கி நிறுத்தினர்.
முத்துப்பேட்டை பஸ் நிலையத்துக்கு பெரும்பாலான அரசு பஸ்கள் வராமல், பைபாஸிலேயே சென்று விடுகின்றன. இதனால் முத்துப்பேட்டையில் இறங்க வேண்டிய பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முத்துப்பேட்டை குமரன் பஜாரை சேர்ந்தவர் நாராயணன் (55). இவர் நேற்று பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு ஊர் திரும்ப ராமேஸ்வரத்திலிருந்து முத்துப்பேட்டை வழியாக சிதம்பரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பின்னர் அவர் கண்டக்டர் ரகுராமனி டம், முத்துப்பேட்டைக்கு டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் முத்துப்பேட்டை நகருக்குள் பஸ் செல்லாது. 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலூர் பைபாஸில் இறங்கிக் கொள்ளும்படி கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நாராயணன், அரசு பஸ்கள் கண்டிப்பாக முத்துப்பேட்டை பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும். இதனால் தன்னை முத்துப்பேட்டை பஸ் நிலையத்தில் தான் இறக்கி விட வேண்டும் என்று அடம் பிடித்தார்.
இந்நிலையில் பஸ் முத்துப்பேட்டை பஸ் நிலையத்துக்கு செல்லாமல், பைபாஸ் சாலையில் சென்றது. அதிர்ச்சி அடைந்த நாராயணன் பஸ்சில் இருந்தபடியே செல்போன் மூலம் முத்துப் பேட்டை டி.எஸ்.பி. மற்றும் காவல் நிலையத்துக்கு தன்னை பஸ் டிரைவர், கண்டக்டர் கடத்தி செல்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள எடையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடன் எடையூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த அரசு பஸ்சை காவல் நிலையம் முன்பு மடக்கி நிறுத்தினர்.
பின்னர் பயணி நாராயணன், இன்ஸ்பெக்டர் முருகனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து எடையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவர் அருள், கண்டக்டர் ரகுராமன் மற்றும் பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் பயணிகள் நலன் அடிப்படையில் பஸ்சை அனுப்பி விட்டு, டிரைவரும், கண்டக்டரும் விசாரணைக்கு போலீஸ் நிலையம் வரவேண்டும் என்று அனுப்பி வைத்தனர்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment