ஆகஸ்ட் 28: ஆட்டோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக பேஸ்புக் பதிவு போட்ட ஓட்டுநருக்கு தடை.
சமூக நலன் கருதி, பொதுநல நோக்குடன் பெண்களின் பாதுகாப்பு குறித்து முகப்புத்தகத்தில் பதிவு போட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு, தடைவிதித்து ஆட்டோ சங்கம் ஒன்று கட்டப்பஞ்சாயத்து முறையில் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கபீர் என்பவர் சமூக நலன் கருதி, பொதுநல நோக்குடன் ஆட்டோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பதிவு ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரின் அந்த பதிவு முகப்புத்தகம் மூலம் பரவியது, சில நாளேடுகளின் இணையதளமும் அவரின் பதிவை செய்தியாக வெளியிட்டிருந்தன. பல்வேறு தரப்பினர் அவர் பதிந்த பெண்கள் பாதுகாப்பு குறித்த பதிவுக்கு நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவரின் இந்த பதிவு ஆட்டோ ஓட்டுநர்களை தவறாக சித்தரிப்பதாக கருதி, அவர் ஆட்டோ ஓட்டும் தக்கலை பகுதி ஆட்டோ சங்கம் அவர் ஆட்டோ ஓட்ட தடைவிதித்தும், மன்னிப்பும் கேட்க வலியுறுத்தியுள்ளது. தவறும் பட்சத்தில் நிரந்தரமாக தக்கலையில் ஆட்டோ ஓட்ட அனுமதிக்கப் போவதில்லை எனவும் முடிவு எடுத்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் கபீர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
பொது நலன், பெண்கள் பாதுகாப்பு கருதி தான் பதிந்த பதிவுக்காக, தனது வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் செயல்படும் ஆட்டோ சங்கத்தின் கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக, தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பொதுமக்கள் ஆதரவினை தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல்: நியூஇந்தியா
தகவல்: நியூஇந்தியா


No comments:
Post a Comment