ஜுன் 21: நேற்றிரவு இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல். யாழ்ப்பாணம் சோனகத் தெரு பகுதியில் அபுபக்கர் வீதி காமல் ஒழுங்கையில் உள்ள காமல் பள்ளிவாசல் கண்ணாடிகளை அடையாளம் தெரியாதவர்கள் அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கும் அதிகாலை ஒரு மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சனிக்கிழமை அதிகாலையில் பள்ளிவாசலுக்குச் சென்ற பள்ளி நிர்வாக சபையினர் பள்ளிவாசலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைக் கண்டு உடனடியாகக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாக சபையினர் காவல்துறையிடம் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சேதங்களைப் பார்வையிட்டு மதிப்பிட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்கில் அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களையடுத்து வடக்கில் இந்தப் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவம், அங்குள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வைத் தோற்றுவித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment