ஜனவரி 29: அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் 41வயது நபர் ஒருவர் 2000 அடி உயர பள்ளத்தாக்கில் இருந்து குதித்து சாதனை புரியும் முயற்சியில் தோல்வியடைந்து பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டேவிட் என்ற 41 வயது நபர் தனது நண்பர்களுடன் அங்குள்ள கொலராடோ என்ற நதியருகே உள்ள பள்ளத்தாக்கில் சென்று 2000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். பாராசூட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கீழே குதித்த அவரை அவரது நண்பர்கள் உற்சாகப்படுத்தினர்.
மேலே இருந்து கீழே குதித்த டேவிட், திடீரென பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பள்ளத்தாக்கின் இடையில் உள்ள பகுதியில் சிக்கினார். இதை மேலே இருந்து பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து அதிரடி மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடியபோது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர் மறுநாள் காலை அவரது உடலை ஒரு பாறை இடுக்கில் இருந்து கண்டெடுத்தனர். ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் உயிரற்ற நிலையில் டேவிட் உடல் மீட்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரிசோனோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அரிசோனோ போலீஸார் டேவிடுடன் சென்ற நண்பர்களை விசாரணை செய்து வருகின்றனர். தகுந்த அனுமதி பெறாமல், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அந்த பகுதியில் இருந்து கீழே குதிக்கும் சாதனைக்கு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment