நவம்பர் 30: சென்னை நகரில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பற்றிய தகவல்களை போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யும் திட்டம் வருகிற டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதையடுத்து 60 நாட்களுக்குள் வீடுகளை வாடகைக்கு கொடுத்திருப்பவர்கள் தங்களது வாடகைதாரர்கள் குறித்த விபரங்களை அருகிலுள்ள காவல்நிலையங்காளில் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:
சமூக விரோதிகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சேகரித்து, குற்ற செயல்களை நிகழ்த்த, வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி தங்களது சதி திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களும், தங்களது சதித் திட்டங்களை நிறைவேற்ற, வாடகை வீடுகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
எனவே இது போல் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் செயல்பாட்டை தடுத்திட, சென்னையில் வாடகை வீடுகளில் இருப்பவர்களை ஒழுங்குபடுத்திட ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளோம். வாடகை தாரர்கள் பற்றிய தகவல்களை, வீட்டு உரிமையாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த திட்டம் திரிபாதி போலீஸ் கமிஷனராக இருந்தபோதே, சென்னையில் கொண்டுவரப்பட்டது. அப்போது கோர்ட்டு தடை ஆணை பிறப்பித்ததால், இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. தற்போது கோர்ட்டு தடை ஆணை விலக்கப்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இந்த திட்டம் மிகவும் எளிதானது. இதில் எந்தவித பயமும் தேவை இல்லை. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, போலீஸ் நிலையங்களில் கொடுக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் போலீஸ் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும்.
இந்த விவரங்கள் போலீஸ் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்ப மனுக்கள் போலீஸ் நிலையங்களில் கிடைக்கும். tnpolice@gov.in என்ற இணையதள முகவரியில் இருந்தும், விண்ணப்ப பாரங்களை எடுத்து கொள்ளலாம்.
வருகிற டிசம்பர் 1 ம் தேதியில் இருந்து, இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அமலுக்கு வந்த 60 நாட்களுக்குள் வாடகை தாரர்கள் பற்றிய தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இதற்கு வீட்டு உரிமையாளர்களே முழு பொறுப்பாளி ஆவார்கள். வாடகை தாரர்கள் பற்றி தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மையானதா? என்பதை போலீசார் தனியாக ரகசியமாக விசாரித்து தெரிந்து கொள்வார்கள்.
டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இந்த திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. சென்னையில் தாமதமாகத்தான் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.


No comments:
Post a Comment