அக்டோபர் 15: சென்னையில் நேற்று டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 2 மாணவர்கள் பலியாகிய சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டிருக்கும் தற்போதைய அசாதாரணமான சூழலைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. அதுவும் தமிழகத்தில் இதனால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர்.
சென்னையில் 2 மாணவர்கள் நேற்று டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளன. சென்னை, வேலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நேற்றுமுன்தினம் தமிழகம் வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தென்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தின் முடிவில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளதேவையில்லை என்றார்.
இருப்பினும் டெங்கு காய்ச்சல் தென் தமிழகத்திலேயே அதிகமாக பரவிவருகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment