அக்டோபர் 08: சென்னை விமான நிலையத்தில் இன்று காலையில் சவுதி அரேபியா செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் மீது சரக்குகளை ஏற்றி செல்லும் டிராக்டர் ஒன்று மோதியது. இதில் 421 பயணிகள் உயிர்தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சவுதி அரேபியா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் விமான நிலைய சோதனை முடிந்து 421 ஹஜ் பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் பயணிகளின் சரக்குகளை ஏற்றி வரும் டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக, விமானத்தின் மீது மோதியது. இதில் விமானத்தில் சிறியளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர்.
அதன்பிறகு விபத்து ஏற்பட்ட விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அனைவரும், சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மாற்று விமானத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
சென்னை விமான நிலையத்தில் இதுபோல விபத்து ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் 26ம் தேதி சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல தயாராக இருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் மீது பயணிகளின் சரக்குகளை ஏற்றி செல்லும் டிராக்டர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 48 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment