ஜுன் 11: தஞ்சையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முருகையன். இவரது மகள் மீனரூபளா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி விடுமுறைக்காக தஞ்சைக்கு வந்த அவரை முருகையன் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் அவரது உறவினர் ரவியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து ஊரை சுற்றி பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தை சேர்ந்த சக்திசுதன் என்ற வாலிபர் அந்த ஊருக்கு தினமும் வேலைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது மீனரூபளாவும் சக்திசுதனை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
மீனரூபளா ஊரை சுற்றிபார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு அடிக்கடி தனியாக வெளியில் சென்று வந்துள்ளார். அப்போது அவர் சக்திசுதனுடன் சுற்றுவதை கண்ட ரவி மீனரூபளாவை கண்டித்துள்ளார். மேலும் சக்திசுதனையும் எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து மீனரூபளாவை தஞ்சையில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து ரவி விட்டுக்கட்டி கிராமத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு சக்திசுதனும் மாயமாகி இருப்பதை தெரிந்துகொண்டார்.
இதுகுறித்து திருத்துறைப் பூண்டி போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது வீட்டிற்கு உறவினராக வந்த பெண் வாலிபருடன் ஓடி சென்றதால் ரவி அவமானமடைந்தார். இந்நிலையில் சக்திசுதன் விட்டுக்கட்டி கிராமத்திற்கு மீனரூபளாவுடன் வந்ததாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ரவி அந்த பெண்ணை கடத்துவதற்காக கூலிபடையை ஏற்பாடு செய்தார். இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் மீனரூபளாவை கடத்துவதற்காக காரில் சென்றுள்ளனர்.
அப்போது முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் முத்துப்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் வெர்ஜீனியா வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வேகமாக சென்ற காரை வழிமறித்து அவர் சோதனை செய்தார். அதில் இரும்பு கம்பிகள், அரிவாள்கள், கட்டைகள் உள்ளிட்டு பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த காரில் இருந்த பூமிநாதன், பாஸ்கர், பாலதண்டாயுதம், சரவணன், ராஜ்குமார், ரமேஷ், செந்தில்குமார், செல்வகுமார், அன்புரோஸ், அசோக் ஆகிய 10 பேரிடம் விசாரணை நடத்தினார். அதில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது உறவினர் பெண்ணை கடத்துவதற்காக எங்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 10 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தார்.
கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து ரவி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி உள்ள ஊராட்சி மன்ற தலைவர் ரவியை தேடி வருகின்றனர். உறவினர் பெண்ணை கடத்துவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் கூலிப்படையை அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment