நவம்பர் 23: முத்துப்பேட்டையில் மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலையால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 17வது வார்டு கொய்யா தோப்பு வடக்கு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பேரூராட்சி சார்பில் சாலை வசதியே செய்து தரவில்லை. சாலை வசதி கோரி பலஆண்டுகளாக இப்பகுதியினர் பேரூராட்சியில் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இப்பகுதி சாலைகள் அனைத்தும் முழங்கால் அளவு சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்கள் சகதியில் சிக்கி பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ஜெய்லானி மற்றும் விக்னேஷ் கூறுகையில்: சாலை வசதியின்றி நாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம். இந்த பகுதிக்கு சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி நிர்வாகம் செய்து தர வில்லை. இதனால் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் பகுதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளது. காத்திருந்து எந்த பயனும் இல்லை. உடனடியாக சாலை வசதி செய்து தரா விட்டால் விரைவில் சகதியில் அமர்ந்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.
ரெத்தினசாமி என்பவர் கூறுகையில், சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக சாலை அமைக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்றார். அதிமுக பிரமுகர் மூர்த்தி: சாலை குறித்து பேரூராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. நான் அதிமுகவை சேர்ந்தவன் என்று சொல்லி கொள்ளவே வெட்கமாக இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment