மார்ச் 07: பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்படுவதால் காகித மற்ற பாஸ்போர்ட் சேவா அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையினரின் அறிக்கை விரைந்து பெற உதவ புதிய ‘ஆப்ஸ்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது, என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வர ராஜா தெரிவித்தார்.
பாஸ்போர்ட் வழங்கும் பணிகளை துரிதப்படுத்தி காகிதமற்ற அலுவலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஸ்போர்ட் அசல் விண்ணப்பம், அத்துடன் இணைந்த ஆவணங்களின் நகல்கள் சேவாமய்யத்தில் பாதுகாக்கப்படாது. விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள நகல்கள் ஸ்கேன் செய்யப்படும். அவற்றை சரிபார்த்து அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின் மனுதாரரின் கையெழுத்து பெற்று, திரும்ப அவரிடமே வழங்கப்படும். போதிய ஆவணங்கள் இல்லாத, குறைபாடுள்ள விண்ணப்பங்கள் மட்டும் சேவா மையத்தில் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாஸ்போர்ட் சேவா மையம் காகிதமற்ற அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. புதன் கிழமைகளில் முன் பதிவு குறைவாக இருக்கிறது. பள்ளி, கல்லுரி மாணவர்கள் குழுவாக புதன்கிழமைகளில் முன்பதிவு தேதி பெற்றால், தேதி வழங்கப்படும்.
பாஸ்போர்ட் வழங்குவதில் காவல்துறையினரின் அறிக்கை அவசியம். காவல்துறையினரின் அறிக்கை பெற ஏதுவாக இந்திய அளவில் 685 காவல் மாவட்டங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறையினரின் அறிக்கையை 21 நாள்களுக்குள் சமர்ப்பித்தால் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.150, 21 நாள்களுக்கு பின் சமர்ப்பித்தால் ரூ.50 என மத்திய வெளியுறவு அமைச்சகம், காவல் துறையினருக்கு வழங்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக காவல் துறையினருக்கு மட்டும், ரூ.7 கோடி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் அறிக்கை விரைந்து பெற ஏதுவாக ‘ஆப்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. விசாரிக்க செல்லும் காவல்துறையினர் தங்கள் அறிக்கையை ‘ஆப்ஸ்’ மூலம் அனுப்பினால் போதும். இதனால் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி, அங்கிருந்து காவல் நிலையங்களுக்கு அனுப்புவது போன்ற நடைமுறைகள் இருக்காது. பாஸ்போர்ட் விண்ணப்ப நிலை மற்றும் பொது தகவல் அறிய 0452-252 1204, புகார் தெரிவிக்க 0452-252 1205, குறைதீர்க்கும் அதிகாரியை 0452-252 0795 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
No comments:
Post a Comment