நவம்பர் 23: முத்துப்பேட்டை வேலை வாய்ப்பு முகாம் திடீர் ரத்து. ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்.
முத்துப்பேட்டை பழைய பஸ் ஸ்டான்ட் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மேலாண்மை அலகு நடத்தும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று 21-ம் தேதி மற்றும் இன்று 22-ம் தேதி குடவாசல் மஞ்சள்குடியில் நடைபெறும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன் செய்தி மாவட்டம் முழுவதும் செய்தித்தாள் மற்றும் துண்டு பிரசூரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று காலையிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தெல்லாம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடினர். மதியம் 1 மணி வரை அதிகாரிகள் யாரும் முகாம் நடைபெறும் இடத்திற்கு வராததால் சந்தேகம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஆனது. அதன் பின்னர் வந்திருந்த இளைஞர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர், தாசில்தார் போன்ற அதிகாரிகளிடம் தொடர்புக் கொண்டு கேட்டனர். அதற்கு அதிகாரிகள் முகாம் பற்றியான எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டனர். அங்கு உள்ள அதிகாரிகள் கலெக்டர் வீட்டு திருமணம் இன்று நடைபெறுவதால் முக்கிய அதிகாரிகள் எல்லாம் சேலம் சென்று விட்டதாகவும் இது பற்றி எங்களுக்கும் எதுவுமே தெரியாது என்றும் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரை தொடர்புக் கொண்டு கேட்டபோது முதலில் எங்களிடம் அனுமதி வாங்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலர் ஒருவர் இந்த முகாம் ரத்து செய்து விட்டதாக நேற்று தகவல் தெரிவித்தனர். இதனால் முகாம் இன்று இல்லையன்று நினைக்கிறேன் என்றார். இதனால் அதன் பின்னரே முகாமிற்கு வந்து காத்திருந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். இது குறித்து இளைஞர் ஆரியலூர் மணிமாறன் கூறுகையில்: ஆர்வமாக வேலை தேடி இங்கு வந்தோம். அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்றைக்கு ஏமாற்றத்துடன் செல்கிறோம் என்றார். இது குறித்து இளைஞர் ஆலத்தம்பாடி திவாகர் கூறுகையில்: 40 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து இந்த முகாமிற்கு கஷ்டப்பட்டு வந்தோம். திடீரென்று அதிகாரிகள் ரத்து செய்ததால் ஏமாற்றத்துடன் செல்கிறோம். என்னை போன்று நூற்றுக்கணக்கானோர் திரும்பி சென்றுவிட்டனர் என்றார்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment