நவம்பர் 02: முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நிறைவு பெற்றது. கடைசி நாளில் அடிக்கடி மின் தடையால் பணி பாதிக்கப்பட்டது. மின்வாரியத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக விடுபட்ட பொது மக்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 30ம்தேதி ஆதார் அட்டை எடுக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் முகாம் துவங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படங்களை பதிவு செய்தனர். கடைசி நாள் என்பதால் முத்துப்பேட்டை நகரத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்கள் அதிகளவில் அங்கு கூடினர்.
ஆதார் அட்டை எடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் புகைப்படம் பதிவின் போது அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. காலை முதல் மாலை வரை சுமார் 15 தட வைக்கு மேல் மின் தடை ஏற்பட்டதால் ஆதார் அட்டை எடுக்க காலதாமதமானது. இதனால் வந்திருந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஆதார் அட்டை புகைப்படத்தை எடுத்துச் சென்றனர். இந்த மின் தடையால் பொது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) கூறுகையில், ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறும் போது அறிவிக்கப்படாத மின் வெட்டு 15 தடவைக்கு மேல் ஏற்பட்டதால் இது குறித்து மின் வாரிய அதிகாரியிடம் சரியான பதில் கூறவில்லை. இதனை வண்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment