+2,மற்றும் S.S.L.C. தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடுத்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 1

+2,மற்றும் S.S.L.C. தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடுத்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!


மார்ச் 01: +2,மற்றும் S.S.L.C. தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடுத்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்களாலும், கல்வி நிறுவனங்களாலும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சகோதர சமுதாய மாணவிகளின் ஏளன பார்வைக்கும் கிண்டலுக்கும் இலக்காகப்படுகின்றனர். ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்து கற்றவை அனைத்தையும் தேர்வு விடைத்தாள்களில் முறையாக பதிவு செய்ய இயலா நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

கிட்டத்தட்ட மனம் கலங்கி தோற்றுவிடுவோமோ என்று சோர்வடையும் நிலை நம் கண்மணிகளுக்கு. இந்த அவல நிலைக்கு தீர்வு எப்போது? என பெற்றோர்களும், சமுதாய ஆர்வலர்களும் ஏங்கி தவித்து வந்தனர்.

அது அவல நிலை மட்டும் அல்ல, உரிமை மறுப்பு.

அரசு பொதுத்தேர்வுக்காக மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாக பாடம் படித்து தேர்வு எழுத சென்ற மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தடுத்து நிறுத்தும் அளவுக்கு அவர்கள் என்ன பஞ்சமா பாதகம் செய்து விட்டனர்? குமுறி குமுறி கொந்தளித்த மாணவிகளுக்கு தடுத்த நிறுத்திய ஆசிரியர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

அவர்கள் ஹிஜாப் என்ற தலை முக்காடு அணிந்து இருந்தது தான் காரணம் என்று சொன்னதோடு ஹிஜாபை அகற்றி விட்டு வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என கண்டிப்புடன் அறிவித்து விட்டதால் வேறு வழியின்றி ஹிஜாப் இன்றியே தேர்வு எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த கெடுபிடி நிலை நீடித்து வந்த நிலையில் முஸ்லிம்கள் இதற்கு கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்து வந்தனர்.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கும், நம் நாடு கடைப்பிடித்து வரும் மத சார்பற்ற தன்மைக்கும் விரோதமானது என்ற போர்க்குரல் எழுந்தது. ஹிஜாபுக்கு தடை விதித்தும், அபராதம் விதித்தும் அடாத செயல் புரிந்த பிரெஞ்சு அதிபர் சர்கோசி தேர்தலில் படுதோல்வி அடைந்து அரசியல் வாழ்வே அஸ்தமனம் ஆனா நிலை உலக அளவில் அசைக்க முடியா வரலாற்று சான்றாக இருக்க, சமூக அமைதிக்கும், சமய உரிமைக்கும் இந்திய திருநாட்டிற்கே முன் உதாரணமாக திகழும் தமிழ் நாட்டில் ஹிஜாபுக்கு தடையா? இது முறையா என உரிமை பேணும் அமைப்புகள் களம் இறங்கின. இதில் காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்கள், மற்றும் நற்பணி அமைப்புகளின் ஒப்புதலுடன், தேர்வு மையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு காயல்பட்டினம் நகராட்சி தலைவி ஐ.ஆபிதா அவர்கள் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி டி.சபீதா IAS , அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவுக்கு உடனடி தீர்வு கிடைத்தது.

அரசுத்தேர்வு இயக்குனர் திரு தேவராஜன் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சி.ஈ.ஒ. (மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி) யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மீண்டும் தேர்வு மையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அரசு தடை செய்யவில்லை என்றும், மீறி ஹிஜாப் அணிய தடை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள சி.ஈ.ஒ.க்களுக்கும் இது தொடர்பான் உத்தரவுகள் தேர்வுக்கு முன்பான சந்திப்பில் பிறப்பிக்கப்படும் என அரசு தேர்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அரசு பொதுத்தேர்வுகளில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பினை சமூக உணர்வுள்ள அனைவரும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு இது தொடர்பான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டால் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்பட்டு மோதல் போக்கை கடைப் பிடிக்காமல் மேற்சொன்ன வழிமுறைப்படி நிலைமையை கையாள வேண்டும். 

கல்வித்துறை, காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் சீக்கிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமயம் தொடர்பான உரிமைகள் முஸ்லிம்களுக்கும் உண்டு. அதனை மறைக்கவோ, மறுக்கவோ எவருக்கும் உரிமையில்லை. ஒன்றுபட்டு உரிமைகள் வெல்வோம். பொதுத்தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வழி வகை கண்ட சமுதாய உணர்வு கொண்ட அனைவரையும் பாராட்டுகிறோம். 

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் வீக்களத்தூர்.இன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here