ஜனவரி 14: முத்துப்பேட்டையில் கடந்த 4 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் கிடந்த சாக்கடை சுத்தம் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி சார்பில் ரூ. 95லட்சம் செலவில் வெள்ளைகுளம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறமும் கழிவு நீர் வடிகால் கட்டும் பணி துவங்கியது. இந்த பணிகள் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பால் பாதியில் நின்றது. அன்று முதல் இன்று வரை அந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் துவங்கவில்லை. அதனால் பணி நடைபெற்ற இடங்களில் வரும் சாக்கடை நீர் வடிய வழியின்றி தேங்கி நின்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மத்தியில் 4 ஆண்டுகளாக சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. இந்த கழிவு நீர் வடிகால் திட்டத்தில் பெருமளவில் முறைகேடு ஏற்பட்டு உள்ளதாகவும், பணியை 15 சதவீதம் கூட முடிக்காமல், அதற்கான தொகை எடுக்கப்பட்டு விட்டதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி அந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அந்த இடம் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. இது குறித்து செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி கூறுகையில்: இது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வடிகால். தற்பொழுது தேங்கிக் கிடந்த சாக்கடை நீர் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த வடிகாலுக்கு மூடி அமைக்க நிதி ஒதுக்கப்படும் என்றார்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment