அக்டோபர் 21: வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஆண்டு தோறும் 40 ஆயிரம் கோடிக்கு மேல் தாயகத்திற்கு அனுப்பி தருகிறார்கள் இவர்களின் நலனுக்கு தமிழகத்தில் எவ்வித பெரிய திட்டங்களும் இல்லை. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் ,நல வாரியம் அமைக்க வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வலியுறுத்துகின்றர். சர்வதேச அளவில் 3 சதவீதம் பேர் தங்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளில் குடியேறி பணி புரிகின்றனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 2.5 கோடி மக்கள் வெளி நாடுகளில் பணி புரிகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் உடலுழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாவர். இதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ. 18 ஆயிரத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இந்தியாவுக்கு ஆண்டுக்கு 7,100 கோடி டாலர் பணப் பரிவர்த்தனை மூலமாக வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மூலம் 800 கோடி டாலர் பணம் வருகிறது. இந்த வகையில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது 2010ல் நடத்திய ஆய்விலும் மத்திய அரசாங்கத்தினுடைய வெளிநாடு இந்திய விவகாரத்திற்கான அமைச்சகத்தில் இணைந்திருக்கக்கூடிய வெளிநாட்டிற்குச் செல்லக்கூடியவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றிலும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில ஜிடிபி-யில் வெளிநாட்டில் வசிப்போரின் பங்களிப்பு 31.2 சதவீதமாக உள்ளது. கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகமும் அதைத் தொடர்ந்து பஞ்சாப், ஆந்திர மாநிலங்கள் வருகின்றன கடந்த ஐந்து ஆண்டுகளில் பண வரவு 8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 2 லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர், சவுதி அரேபியாவிலும் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர் மற்றும் கத்தார், குவைத் ,மலேசியா சிங்கப்பூர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தமிழகத்தை சேர்ந்தோர் பணி புரிய சென்றுள்ளனர். உற்றார் உறவினர்களை பிரிந்து பல்லாயிரம் கோடியை தாய் நாட்டிற்கு அனுப்பும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அவர்கள் தாயகம் திரும்பினால் தமிழகத்தில் அரசு சார்பாக அவர்களின் நலன் காக்க இது வரை பெரிய திட்டங்கள் எதுவுமில்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த கால திமுக ஆட்சியின் போது வெளிநாட்டு வாழ் தமிழர் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலச் சட்டம், 2011ல் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்காக, தனி நிதியம் உருவாக்க வழி செய்யப்பட்டு. வாரியம் ஒன்றை உருவாக்கவும், சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால் இது வரை இச்சட்டம் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் வெளிநாட்டு வாழ் கேரள மக்களுக்காக நார்கோ என்ற அரசு துறை செயல்பட்டுவருகிறது கூடுதலாக தனி அமைச்சகம் ஏற்படுத்தி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இடம்பெயர்ந்தோர் வள மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டு ரூ.1 கோடி சுழற்சி நிதியாக ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு செலவீனங்களுக்கு ரூ15 லட்சம் ஒதுக்கப்பட்டது.இம்மையம் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த் தலைமையில் செயல்படுகிறது.ஆனால் இத்தொகை யானை பசிக்கு சோளபொறி என்பது போன்ற மிக குறைந்த தொகையாகும் இது குறித்து,
துபாயில் உள்ள சமூக ஆர்வலர் முருகேஷன் கூறியதாவது:
இங்கே பணியாற்றும் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினால் இவர்கள் தொழில் செய்ய கடன்பெற மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். அவர்களுக்கென வங்கி கடன் திட்டத்தை உருவாக்க வேண்டும் அதே போன்று வெளிநாட்டு வாழ் தமிழர்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தின் துறை சார்பாக மாதந்தோறும் ‘குறை தீர்க்கும் நாள்’ போன்ற நிகழ்ச்சிகள் தமிழர்கள் அதிகம் வாழும் நாட்டில் நடத்தப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வதோடு, பணியாளர்களின் மன அழுத்தம் போக்க, மனோதத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குதல்,இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் உள்ள போலி ஏஜெண்டுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள முடியும் ஆனால் இது வரை தமிழக அரசிடம் எவ்வளவு தமிழர்கள் வெளிநாட்டில் பணி புரிகிறார்கள் என்ற துல்லியமான புள்ளி விபரம் எதுமில்லை எனபது மிகவும் வேதனைக்குறியது என்றார்.
யுஏஇல் ஈமான் சமூக நல தமிழ் அமைப்பின் பொது செயலாளர் லியாக்கத் அலி கூறியதாவது:
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான எம்பி தொகுதியையோ அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியவின் மாநில வாரியான மக்கள் தொகையின் பெருக்கத்தின் அடிப்படையில் எம் எல் ஏ தொகுதி உருவாக்க வேண்டும் இதன் மூலம் இங்கு பணிபுரியும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முடியும்.இதற்கு அடிப்படையாக ஆன் லைன்மூலம் வாக்களிக்கும் உரிமையை ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம் உருவாக்கப்பட்டால் வெளிநாட்டி உள்ள ஒரு தமிழர் இறந்து விட்டால் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதில பொருளாதார ரீதியாக ஏற்படும் சிக்கல்,போலி நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் ஏமாற்றப்படுதல்,சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் வாடுபவர்களுக்கு சட்ட ரீதியான உதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்ச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.
அபுதாபியில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த பரக்கத் அலி கூறியதாவது:
வெளிநாட்டில் வேலை தருவதாக கூறி போலி ஏஜெண்ட்களால் ஆயிரக்கணக்கானோர் அவ்வப்போது ஏமாற்றப்படுகின்றனர்.இதனை தடுக்க வெளிநாட்டு நாட்டு நிறுவனங்கள் பற்றி அறிந்து வேலை வாய்ப்பை உறுதி படுத்த சென்னை மதுரை,கோவை திருச்சி போன்ற நகரங்களில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் நியமனம் செய்ய வேண்டும் . சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் பணிபுர்ந்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலனோர் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் தமிழர்கள் இவர்களுக்கு நாடு திரும்பினால் வேறு தொழில் செய்ய வழியின்றி வாழ்விற்கு அல்லல் படும் சூழல் ஏற்படுகிறது.இந்தியாவிலேயே கேராளவில் வெளிநாட்டு வாழ் கேரளத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் நல வாழ்விற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.அதே போன்று தமிழகத்தில் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்
பல ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல வாரியம்,தனி அமைச்சகம், வங்கி கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வெளிநாட்டு வாழ் தமிழ் அமைப்பு வலியுறுத்தி வருகின்றன ஆனால் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. இனியவாது அரசு விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வெளிநாட்டு வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சவுதி அரேபியாவில் பணிபுரியும் ஜஹாங்கிர் என்பவர் கூறியதாவது:
சென்னையில் தலைமை செயலகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான உதவி மையம் திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் இருக்குமானால்..தயக்கமின்றி தாய் மொழி தமிழில் தொடர்பு கொண்டு தங்களின் வாழ்க்கை போராட்டத்திற்கான விடியலை தேடும் சூழல் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு கிடைக்கும். என்றார்.
No comments:
Post a Comment