செப்டம்பர் 21: ஐக்கிய அரபுக் எமிரேட்ஸ் நாடுகளின் ஒன்றான அபுதாபியில் இந்திய இஸ்லாஹி இஸ்லாமிக் பள்ளி ஒன்று நடைபெற்று வருகின்றது. இதில் 1,300 பிள்ளைகள் படித்து வருகின்றனர். கடந்த 15 ஆம் தேதி அபுதாபியின் கல்விக் குழு இந்தப் பள்ளியை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று பள்ளி மூடப்படும் என்ற அறிவிப்புப் பலகையினை பள்ளியின் முன்புறக் கதவுகளில் நிர்வாகம் மாட்டியுள்ளது.
அபுதாபி கல்விக் குழுவின் மெமோ (MEMO) நகல் ஒன்றையும் அனைத்துப் பெற்றோர்களிடமும் நிர்வாகம் விநியோகித்துள்ளது. இந்த அறிக்கை பெற்றோர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பாடத் திட்டம் கொண்ட பள்ளிகளுக்கு குறைந்த அளவே அனுமதி இருப்பதால் மற்ற பள்ளிகளில் அனுமதி கிடைப்பது கஷ்டமாக இருக்கும். அதுவும் குறைந்த அளவிலான காலகட்டத்தில் கடைசி நேரத்தில் பள்ளிகளைத் தேடி அலைவது இயலாத காரியம் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். லாப நோக்கில்லாமல் செயல்படும் பள்ளி இது என்றபோதிலும், முன்கூட்டியே இந்த முடிவு தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
பள்ளியின் தலைவரான முஹ்சின்.கே மாணவர்களின் கல்வி தொடருவதற்கு தன்னால் இயன்றவரை செயல்படுவதாகக் கூறியுள்ளார். 1,310 மாணவர்கள் படிப்பதால் கல்விக் குழுவையும் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க முயலுவதாகவும், குறைந்தபட்சம் பள்ளி மூடப்படும் தேதியையாவது தள்ளி வைப்பதற்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment