செப்டம்பர் 21: தண்ணீர் வராததால் நடவடிக்கை எடுக்காத முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பைப்புக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு மருதங்காவளி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு முத்துப்பேட்டை நகரில் வழங்கப்படும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த பல வருடங்களாக நிறுத்தப்பட்டு விடடது. இதனால் மருதங்காவெளி பகுதி மக்களுக்கு 12 இடங்களில் அடி பைப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் எடுத்து வந்தனர்.
இதில் கால்நடை மருத்துவமனை பகுதியில் வசிக்கும் மக்களுக்காக அப்பகுதியில் 1 அடிபைப் உள்ளது. இந்த அடிபைப் கடந்த 8 மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. அதனைத் தொடர்ந்து அடி பைப்பில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி தலைவரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பேரூராட்சி உறுப்பினர் மாரிமுத்து தலைமையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வம் மற்றும் ஜீவா, மாரியம்மாள், மஞ்சுளா, காளியம்மாள் உள்ளிட்ட பலர் அடி பைப்பிற்கு மாலை அணிவித்து, பொட்டு வைத்து நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் குடிநீர் குழாயை சீரமைத்து தராத பேரூராட்சி தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் மாரிமுத்து கூறுகையில், சாதாரண இந்த அடி பைப்பை பராமரிப்பதற்கு கூட செலவு செய்வதற்கு யோசிக்கிறார் தலைவர். இப்பகுதி மக்களுக்கு அடி பைப்பை சீர் செய்து தராவிட்டால் பேரூராட்சி தலைவரை கண்டித்து முற்றுகையிடுவோம் என்றார்.
No comments:
Post a Comment