டிசம்பர் 06: அரபு நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 45000 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அரபு நாடுகளில் வேலை செய்வதற்காக செல்லும் இந்தியர்களில் சிலர், தங்களின் விசா காலம் முடிந்த பின்னும் அனுமதியின்றி அங்கு தங்கியுள்ளனர். அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடைமுறையில் உள்ளது.
டிசம்பர் 4ம் தேதி முதல் 2 மாத காலத்திற்கு (பிப்ரவரி வரை) இதைப் போன்ற பொது மன்னிப்பு முகாம்கள் அரபு நாடுகளில் நடைபெறுகின்றது. இதனையடுத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி, அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
அரபு நாடுகளில் விசா முடிந்த பிறகும் தங்கியுள்ளவர்களுக்கு அபராதமில்லாமல் பொது மன்னிப்பு வழங்கும் முகாம், விசாக்களை நீட்டித்து முறைப்படுத்தும் முகாம் ஆகியவை பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறுகின்றது.
அப்போது அங்கு தங்கியுள்ள சுமார் 45 ஆயிரம் இந்தியர்கள், தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்கள் பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில் அங்கு வேலைக்கு சென்ற ஏழை மக்கள். அவர்களால் விமான கட்டணம் போன்ற செலவுகளை ஏற்க முடியாது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிதியின் மூலம் அவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அழைத்து வரும் அளவிற்கு இந்திய சமுதாய நிதியத்திடம் போதுமான நிதியாதாரம் இல்லை.
எனவே, மாநில முதலமைச்சர்கள், அரபு நாடுகளில் தங்கியுள்ள உங்கள் மாநிலத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் நாடு திரும்ப தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் பொது இடங்களில் சுற்றித் திரியும் போது, போலீசாரிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இதைப்போன்று அங்கு தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் குறை தீர்ப்பு முகாம்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.
கடந்த1996-ம் ஆண்டு நடந்த பொது மன்னிப்பு முகாமில், அரபு நாடுகளில் தங்கியிருந்த 2 லட்சம் வெளி நாட்டினர், தங்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
2002-ல் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். 2007-ல் 3 லட்சத்து 42 ஆயிரம் பேரும் இவ்விதமாக வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 40 ஆயிரம் பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் அபராதம் ஏதுமின்றி வெளியேற அனுமதி அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் கழித்து தற்போது பொதுமன்னிப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த பொது மன்னிப்பு முகாமில் பணி விசா, சுற்றுலா விசா மூலமாக அரபு நாடுகளுக்கு சென்று விசா காலம் முடிந்த பிறகு தங்கியுள்ளவர்கள் மட்டும் தான், தண்டனை ஏதுமின்றி சொந்த நாட்டிற்கு திரும்ப முடியும்.
முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் கள்ளத்தனமாக தங்கியுள்ளவர்கள், கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment