ஜூலை.17: சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடம் அமைகிறது. இன்னொரு வழித்தடம் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை அமைகிறது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதில் முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஐகோர்ட், சென்ட்ரல், புதிய தலைமை செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாப்பேட்டை ஆகிய 11 இடங்களில் சுரங்க ரெயில் நிலையங்கள் அமைகிறது.
2-வது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கே.எம்.சி. பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய்நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய 9 இடங்களில் சுரங்க ரெயில் நிலையங்கள் அமைகிறது.
பூமிக்கு மேலே உயர் மட்ட பாலத்தில் நடைபெறும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, அசோக்பில்லர், கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலங்கள் வியக்க வைக்கிறது. பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணிக்காக ரஷியா மற்றும் சீனாவில் இருந்து ராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தனி தனி பாகங்களாக கொண்டு வரப்பட்ட இந்த எந்திரங்கள் பொருத்தப்பட்டு நேரு பூங்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது. சுரங்கம் தோண்டுவதற்கு எந்திரத்தை பூமிக்கு அடியில் கொண்டு செல்வதற்காக 200 மீட்டர் நீளம் 20 மீட்டர் அகலம் 23 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சுற்றிலும் பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஷெனாய்நகர், வண்ணாரப்பேட்டை, மே தின பூங்கா ஆகிய இடங்களில் டனல் போரிங் எந்திரங்களை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுரங்கம் தோண்டும் டனல் போரிங் எந்திரம் 84 மீட்டர் நீளம் உள்ளது. இந்த எந்திரம் ஆண்டு முழுவதும் சுரங்கம் தோண்டி கொண்டிருக்கும். அதிக பட்சமாக ஒரு நாளைக்கு 20 மீட்டர் தோண்டும். பாறைகள் இருக்கும் பகுதியில் ஒரு நாளைக்கு 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை தோண்டும்.
சுரங்கம் தோண்டும் போதே மேல்பகுதியில் இருந்து 6 மீட்டர் வட்ட வடிவிலான சிமெண்ட் சுவர்கள் பொருத்தப்படும். இந்த எந்திரத்தில் 2 ஊழியர்கள் ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு கம்ப்யூட்டரில் இயங்கும் கட்டுப்பாட்டறை டனல் போரிங் எந்திரத்தில் செயல்படும்.
டனல் போரிங் எந்திரத்தில் முன்பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் பிளேடுகளை மாற்றுவது இந்த பணியாளர்களின் வேலை. கடுமையான மழை பெய்தாலும் சுரங்கம் தோண்டும் பணியில் பாதிப்பு ஏற்படாது.
பூமிக்கு மேலே வழக்கமான போக்குவரத்து, ஜனநட மாட்டம், குடியிருப்புகள், கட்டிடங்கள் எதற்கும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பணிகள் நடந்து கொண்டிருக்கும்.
2015-ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்ட மிட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
No comments:
Post a Comment