ஜூன் 23:ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் போலந்து மற்றும் உக்ரைன் நாட்டில் நடைபெற்ற வருகிறது. முதல் கால் இறுதி போட்டியில் போர்ச்சுக்கல் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நள்ளிரவு நடைபெற்று இரண்டாவது கால் இறுதி போட்டியில் ஜெர்மனி மற்றும் கிரீஸ் மோதின. அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டி என்பதால் இந்த போட்டி விறுவிறுப்புடன் இருந்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனியின் சார்பில் அணியின் கேப்டன் பிலிப் லாம், சாமி கெதிரா, மிரோஸ்லவ் க்லோஸ், மார்கோ ரெவுஸ் ஆகியோர் கோல் அடித்தனர். கிரீஸ் சார்பில், சமராஸ், சல்பிங்க்டிஸ் ஆகியோர் இரு கோல் அடித்தனர். போட்டியின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7-வது தடவையாக யூரோ கால்பந்து தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்து ஜெர்மனி புதிய சாதனை படைத்துள்ளது. இப்போட்டியை காண ஜெர்மனிய அதிபர் ஆஞ்செலோ மார்கெல் கலந்துகொண்டு ஜெர்மன் அணிக்கு மேலும் உற்சாகமூட்டினார்.
இந்த போட்டித்தொடரின் மூன்றாவது கால் இறுதி போட்டி ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. நாளை இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெறுகிறது.
நான்கு அணிகளுமே மிகப்பலம் வாய்ந்த அணிகள் என்பதால் அரையிறுதிக்கு செல்ல போகும் அணி எதுவென்பதில் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment