ஆகஸ்ட் 28: பட்டுக்கோட்டையில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.
பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் 2 இடங்களில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் தஞ்சாவூர் திட்டமிட்ட குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் லக்குமணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், போலீஸ் ஏட்டுகள் காமராஜ், செந்தில், சரவணன், ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள 2 இடங்களை திடீர் சோதனையிட்டனர்.
சோதனையில் உரிமம் இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதில் அதிர்வேட்டு, மாப்பிள்ளை வெடி, நாட்டு வெடி, பேப்பர் வெடி, தோரண வெடி உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்ததாக மாணிக்கவாசகம் (வயது 53), வைரமணி (52) ஆகிய இருவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து இருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகரின் முக்கிய பகுதியில் இருந்து நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல்: அதிரை நியூஸ்


No comments:
Post a Comment