பிப்.27- அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கடாச்சலம் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் இதுவரை வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய அளவில் அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. 10 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கை, புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கைகளால் விலைவாசி ஏறுகிறது. அதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காதது கண்டனத்துக்குரியது. விலைவாசி உயர்வின் காரணமாக தொழிலாளர்கள் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். மற்றும் கொள்கைகளின் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக கடந்த 3 ஆண்டுகளில் 45 லட்சம் நிரந்தர தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையை கைவிடவேண்டும். தொழிலாளர் சட்டங்கள், தொழிற்சங்கங்களை பதிவு செய்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்ககூடாது. 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
எங்களது இந்த நியாயமான போராட்டம் பொதுமக்கள் நலன் சார்ந்தது. எனவே நாளை ஒருநாள் சிரமத்தை தாங்கிக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் 25 பொதுத்துறை வங்கிகள், 25 தனியார்துறை வங்கிகள், 26 அயல்நாட்டு வங்கிகள் ஆகியவற்றை சேர்ந்த 87 ஆயிரம் கிளைகள் உள்ளன. 7 ஆயிரம் இன்சூரனஸ் நிறுவன கிளைகள் உள்ளன.
இவைகளில் பணிபுரியும் 9 லட்சம் தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் 20 ஆயிரம் வங்கிக் கிளைகள் உள்ளன. இதில் 50 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நாளை அனைத்து வங்கிப் பணிகளும் முற்றிலுமாக முடங்கும். 7 வங்கி ஊழியர் சங்கங்கள், 6 இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் சங்கங்கள் ஆகியவை முழு அளவில் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment