பிப்ரவரி 03: முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற 24 மணி நேரம் கெடு.
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைகேடான பணிகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் 2014ம் ஆண்டு முகம்மது மாலிக் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறை கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி சென்றாண்டு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்நிலையில் அதே வழக்கில் சென்னை உயர் நீதி மன்ற வழிக்காட்டுதலின் படி சில மாதங்களுக்கு முன் செக்கடிகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஓ ஆகியோருக்கு முகம்மது மாலிக் மனு அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருவாரூர் கலெக்டருக்கு மனு அனுப்பினார். அதில் செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு அகற்ற தான் அனுப்பிய மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர்கள் மீது உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள், செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை பேரூராட்சியில் ஒப்படைத்தனர். அதன் படி பேரூராட்சி சார்பில் செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றி கொள்ள 3 முறை நோட்டீஸ் வழங்கியது. அதன் பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதனால் கடந்த மாதம் கலெக்டருக்கு முகமது மாலிக் மீண்டும் மனு அனுப்பினார். அதில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தாங்களும், அதிகாரிகளும் செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பை எடுப்பதில் ஆர்வம்காட்டவில்லை. அதனால் தங்களது மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் சென்னை உயர் நீதி மன்றத்தில் அதிகாரிகள் மீது முகம்மது மாலிக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது விசாரணையை 3ம் தேதி நீதி பதி ஒத்திவைத்தார்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் அவசர அவசரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்கள் 24 மணி நேரத்துக்குள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நோட்டீசை அனைத்து வீடுகளிலும் அதிகாரிகள் ஒட்டினர்.
No comments:
Post a Comment