Add caption |
அக்டோபர் 13: முத்துப்பேட்டை அருகே உள்ள விளங்காட்டில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத நேற்று ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.
அப்போது பணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை வந்ததும் பணம் செலுத்துவதாக தெரிவித்தனர். இதனை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து ஹால் டிக்கெட் பெறாத மாணவர்கள் விளங்காட்டில் வேளாங்கண்ணி– பட்டுக்கோட்டை சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்களுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள்கட்சி துணை செயலாளர் முல்லை வளவன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், முத்துப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களுடனும், கல்லூரி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கல்லூரி நிர்வாகம் ஹால் டிக்கெட் வழங்க ஒப்பு கொண்டதால் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்ற மீனாட்சி சுந்தரத்தை வழிமறித்து விளங்காடு பகுதியை சேர்ந்த 10 பேர் கும்பல் தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்று திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசில் மீனாட்சிசுந்தரம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விளங்காட்டை சேர்ந்த இளையராஜா (36), தீபன் சக்கரவர்த்தி (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Thanks : muthupetblog
No comments:
Post a Comment