ஜனவரி 16: அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. 23 பயணிகள் இருந்தனர்.இன்று அதிகாலை 4 மணி அளவில் பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை ஓர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. பஸ்சின் அடியில் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு தண்டலம் கிராம மக்களும், அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து இருக்கைக்கு அடியில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பயணி அதிரை சேர்ந்த அப்துல் கறீம் (54) சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும், அதிரை சேர்ந்த சலீம், யாஸ்மின், முகமது அலி, ஹஜியம்மா உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் துரைப்பாக்கத்தை சேர்ந்த வினோதா உள்பட 2 பேரின் கால் துண்டாகி உள்ளது. அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.காயம் அடைந்த அனைவரையும் சென்னை, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.பலியான அப்துல் கறீம் பாலவாக்கத்தில் சொந்தமாக தண்ணீர் லாரி வைத்து தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
விபத்து குறித்து பயணி இப்ராஹிம் கூறும் போது,
‘‘அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டு இருந்தோம். திடீரென ஆம்னி பஸ் பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.சீட்டுக்குள் சிக்கிய அனைவரும் பயத்தில் கூச்சலிட்டோம். கிராம மக்கள் விரைந்து வந்து மீட்டதால் பலர் உயிருடன் தப்பினோம்’’ என்றார்.
தகவல்: அதிரை நியூஸ்
No comments:
Post a Comment