டிசம்பர் 24: ஐஎஸ் அமைப்புக்கு கட்டாய ஆள் சேர்ப்பு சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் முத்துப்பேட்டை வாலிபர் புகார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு கட்டாய ஆட்கள் சேர்க்கும் பணி சென்னையில் தொடங்கி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதுவும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் ஒருவரே நேரடியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் உளவுத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ் அமைப்பு இஸ்லாமிய நாட்டை அமைத்துள்ளது. அங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியத் அமலில் உள்ளது. மேலும் அகண்ட இஸ்லாமிய தேசம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சேர்ந்து வந்தனர்.
தற்போது அந்த இயக்கத்தில் சேர்ந்த இளைஞர்களில் பலர், அங்குள்ள அவலங்களை கண்ட பிறகு அதில் இருந்து விலகியும் வருகிறார்கள். சமீபத்தில் கூட ஐஎஸ் இயக்கத்துக்காக சண்டைக்கு செல்லாத 100 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பு கால்ஊன்றுவதை தடுக்கும் வகையில் இந்திய உளவுத் துறை, ரா மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சேனல் 4 வெளியிட்ட தகவல்களின் படி, ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே டிவிட்டர் தளத்தில் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட மெஹதி என்கிற மேற்கு வங்க இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் லேப்டாப்பை ஆராய்ந்தபோது அதில் 2.5 லட்சம் தகவல்களை போலீசார் பிரிண்ட் எடுத்தனர்.
இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்துக்கு தமிழகத்திலும் ஆட்களை பிடிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது. அதுவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்ட ஒருவர் நேரடியாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஐஎஸ் அமைப்புக்கு கட்டாயமாக வரச்சொல்லி வலியுறுத்திய நபரின் பெயரும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தேசிய புலனாய்வு துறையினர், கியூ பிராஞ்ச் போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர்.
இப்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தைரியமாக புகார் கொடுத்துள்ள நபர் முகப்பேர் பாரதி சாலையை சேர்ந்த ஷேக் பரீத்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை. எம்பிஏ முடித்துள்ளேன். சென்னை தி.நகரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கடந்த 21ம் தேதி தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் எதிரே உள்ள தெய்வநாயகம் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது, அங்கிருந்து 2 பேர் என்னிடம் வந்து தெரிந்தவர்கள்போல் கை குலுக்கி பேசினர். அதில் ஒருவர் பெயர் தாவூத். மற்றொருவர் பெயர் தமீம் ரோஸ்லான் என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.
தனியாக பேச வேண்டும் என்று கூறி என்னை கீழ் தளத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து தாங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்து வருகிறோம். நீங்கள் எங்கள் அமைப்பில் சேர வேண்டும் என்று என்னிடம் கூறினர். இதற்கு நான் ஆட்சேபம் தெரிவித்தேன். மதங்களை கடந்து மனிதர்களை நேசிப்பவன் நான் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
இதைக் கேட்டு 2 பேரும் ஆத்திரம் அடைந்தனர். திடீரென ஒருவன் எனது கழுத்தை பிடித்து நெரித்தான். மற்றொருவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் விடுத்தான். உடனடியாக ரூ.1 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் உன்னை கடத்தி கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று தெரிவித்தேன். இதைத் தொடர்ந்து எனது பாக்கெட்டில் இருந்த ரூ.3,200 எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து என்னை சரமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்து பைக் ஒன்றில் சென்று விட்டனர். எனவே, என்னை பயங்கரவாத அமைப்பில் சேரும்படி மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தி, பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் வரதராஜூ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பி ல் சேரும்படி பட்டதாரி வாலிபருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தமிழகத்தில் இயங்கி வருகிறதா? அல்லது அந்த பெயரை சொல்லி வேறு ஏதேனும் கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்: தினகரன்
No comments:
Post a Comment