சீரழியும் சிறார்கள் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 9

சீரழியும் சிறார்கள் !


“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விடப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)
மது இன்று சமூகத்தில் மிகப் பெரிய ஆபத்தாக வளர்ந்திருக்கிறது. தினமும் மது அருந்துவது, பண்டிகைக் கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகள், விசேஷ தினங்களின்போது மது அருந்துவது என்று மது மிக மிகச் சாதாரணமாக பரவலாகி வருகிறது.
மது அருந்துவது அருவருக்கத்தக்க செயல் என்ற நிலை போய் கண்ணியம் என்ற நிலை சமூகத்தில் வந்துள்ளது. இன்று மது இல்லாத விருந்து நிகழ்ச்சிகள் அரிதிலும் அரிது.
மது பயன்பாடு அதிகமாகி வருகிறது என்பதை விட கவலைக்குரியது அதிகமான இளைஞர்களும், மாணவர்களும் அதற்கு அடிமையாகிறார்கள் என்பதுதான். கல்லூரிகளில் மாணவர்களிடையே மது சர்வசாதாரணமாகப் புழங்கப்படுகிறது. அத்தோடு 10 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களும் இப்பொழுது மதுவைக் குடிக்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன.
வீடுகளில் பெற்றோர் மதுவை அருந்துவது அதிகரித்திருப்பதால் பெரும்பாலான வீடுகளில் மது இருப்பு, வெளியிலும் மது சாதாரணமாகக் கிடைப்பது, சினிமா, சீரியல் போன்றவற்றில் மது அருந்துவது சாதாரணமாகக் காட்டப்படுதல் போன்றவை மதுவின் மீது சிறுவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்.
இது மட்டுமல்ல. போதை மருந்தும், கஞ்சாவும் மாணவர்களிடம் இப்பொழுது அதிகப் புழக்கத்தில் வந்துள்ளன. இவற்றை மாணவர்களிடம் விற்பதற்கு பெரும் மாஃபியா கும்பல்கள் கல்லூரி, பள்ளி வளாகங்களில் அலைந்து கொண்டிருக்கின்றன.
18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. சமீபத்தில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் அரசின் மதுபானக் கடைகளிலிருந்து மது வாங்குவது செய்தியாக வந்திருந்தது. இளம் பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிக்கொண்டிருக்கும் படங்களும், விடுதி அறைகளில் இரவு நேரங்களில் மாணவிகள் மது அருந்தும் காட்சிகளும் சமீபத்தில் முகநூலில் வந்திருந்தன.
குழந்தைகள் குற்றங்கள் புரிவதன் பின்னணியில் மதுவுக்கும், போதை மருந்துக்கும், கஞ்சாவுக்கும் பெரும் பங்குண்டு. சிறு வயதிலேயே கொலைகளிலும், பாலியல் பலாத்காரங்களிலும் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது.
இன்று இளையோர் சிறைகளில் (Juvenile Jails) அடைக்கப்படும் பெரும்பாலான சிறுவர்கள் செய்த குற்றங்கள் மேற்சொன்னவையே. கடந்த 2012ம் ஆண்டு கேரளாவில் மட்டும் 989 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கணக்கு 2013ல் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது 2013 செப்டம்பர் 30 வரையுள்ள கணக்குப்படி 1450 பேர் அங்கே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் கொலைக் குற்றத்திற்காகவும், 30 பேர் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகவும் பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடையிலுள்ளவர்களே.
இந்தச் சீரழிவுகள் ஏற்படும் என்பதனால்தான் இஸ்லாம் மதுவை முற்றிலுமாகத் தடை செய்தது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “மது போதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று மறுமையில் அல்லாஹ்வைச் சந்திப்பான்.” (அஹமத்)
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர் அனைவரையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)
போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனையை இறைவன் வழங்குவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
”போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்களுக்கு ‘தீனத்துல் கப்பால்’ எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்ன?” என்று கேட்டனர். “அது நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்” என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
குழந்தைகளிடம் பெற்றோர்கள் இது சம்பந்தமாக அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன. குழந்தைகளிடம் நல்ல பழக்கவழங்களைப் புகுத்த பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாளைய இந்தியா நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.
விசுவாசம் கொண்டவர்களே! மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல் குர்ஆன் 05 : 90)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here