பிப்ரவரி 04: அறந்தாங்கி அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தெற்கு கொடிக்கரம்பையை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் அருண்ராஜ் (வயது 17). இவர் குரும்பக்காடு என்ற ஊரில் உள்ள தனியாரின் லாரல் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்–2 படித்தார். நேற்று முன்தினம் அருண்ராஜின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தங்கள் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்தது தொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரித்துவிட்டு சென்றனர்.
அன்று இரவு 10.30 மணி வரை சகமாணவர்களுடன் படித்துக் கொண்டிருந்த அருண்ராஜ் விடுதிக்கு செல்லாமல் வகுப்பறையிலேயே படுத்து விட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை வகுப்பறையின் மேற்கூரை இரும்பு சட்டத்தில் கயிறு கட்டி தூக்குப்போட்ட நிலையில் அருண்ராஜின் பிணம் தொங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அருண்ராஜின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மாணவனின் தந்தை முத்துசாமி அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் தனது மகனிடம் கல்விக்கட்டணம் ரூ.20 ஆயிரம் கட்டச்சொல்லி நிர்வாகத்தினர் கூறினர். பள்ளிக்கு வந்து பணம் கட்டுவதாக தெரிவித்தேன். ஆனால் எனது மகன் தூக்கில் தொங்கி இறந்து விட்டதாக தகவல் கொடுத்தனர். இதில் கவனக்குறைவாக இருந்த பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பள்ளி நிர்வாகம், விடுதி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியது. பள்ளியில் குவிந்த பொதுமக்கள் நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுக்கும் வரையில் மாணவர் அருண்ராஜ் உடலை எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் அறந்தாங்கி–பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி ஆர்.டி.ஓ. துரை, மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் அருள்முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.
No comments:
Post a Comment