பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களின் சான்றிதழ்களை திருமணப் பதிவாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 23

பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களின் சான்றிதழ்களை திருமணப் பதிவாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தல்.



டிசம்பர் 23: பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களின் சான்றிதழ்களை திருமணப் பதிவாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தல்

பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களில் நடை பெறும் திருமணங்களின் பதிவுச் சான்றுகளை ஏற்று பாஸ்போர்ட் வழங்க விதி களை தளர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். 

உச்சநீதிமன்றம் மத்திய -மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியவாறு சில மாநிலங்களில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஸ்போர்ட் பெறுவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாதவாறு பாதிக்கப்பட்டு வருகின்றனர். காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இது தொடர் பாக பல முறை முயற்சி மேற் கொண்டு வலியுறுத்தி வந்துள் ளார். 

இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அஹமது சாஹிப் வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட் பிரிவு உயர் அதிகாரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உத்தரவுகள் பிறப்பித்தும் இன்னமும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. 

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது பாரம்பரிய அடிப்படையில் உள்ளூர் திருமணசான்றிதழ்களை இணைத்திருந்தாலும், திருமணப்பதிவாக சார்பதிவாளர் அலுவலக சான்றையே கேட்கின்றனர். இல்லையேல், பாஸ் போர்ட் வழங்காமல் விண்ணப் பத்தை நிராகரித்து விடுகின்றனர். இப்பிரச்சினையை (டிசம்பர் 17) நாடாளுமன்ற மக்களவையில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., எழுப்பினார். 

விதி எண். 377-ன் கீழ் அவர் முன்வைத்த கோரிக்கை வருமாறு-

திருமண கட்டாய பதிவுச் சட்டம் 

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழகத்தில் 2009-ஆம் ஆண்டு திருமண கட்டாய பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், மக்கள் மத்தியில் இச்சட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை. இதனால் இச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யாதோர் மீது அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. 

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு பொது மக்கள் விண்ணப்பிக்கும் போது இந்த சட்டத்தை சுட்டிக்காட்டி பெரும் சிக்கலை பாஸ்போர்ட் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின் றனர்.

இதுபோன்று புதிய பாஸ்போர்ட் கோரியோ அல்லது தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவோ விரும்பி விண்ணப்பிப்போர், தங்களின் தொடர்புடைய கோயில்கள், மஸ்ஜித்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட பாரம்பரிய திருமணச் சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்திருந்தாலும், சார்பதிவாளரிடமிருந்து சான்றிதழ் பெறப்படவில்லை எனக் காரணம் கூறி விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தினர் நிராகரித்து விடுகின்றனர்.

பாஸ்போர்ட் அதிகாரிகளின் நிர்பந்தத்தின் பேரில் சார்பதிவாளர் அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்ய முன் வருகின்றபோது, திருமணமாகி 90 நாட்களுக்குள் மட்டுமே பதிவு செய்ய முடியும். இல்லையேல் பதிவு செய்ய முடியாது என கூறி விடுகின்றனர். 

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யாமல் பாரம்பரிய நடை முறைப்படி திருமணங்கள் செய்துள்ளோர் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது இதுபோன்ற சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

திருமண கட்டாய பதிவுச் சட்டத்தை மாநில அரசே தண்டனைக்குரிய குற்றமாக கருதாமல் இருக்கும்போது , பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிராகரிப்பதன் மூலம் பாஸ்போர்ட் நிர்வாகத்தால் தாங்கள் தண்டிக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

எனவே, நடைமுறை சாத்தியமாக தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தினரிடமிருந்தும் இருந்து வரக்கூடிய வழக்கமான மஸ்ஜித், கோயில், தேவாலயங் களில் நடைபெறும் திருமணங்களில் அந்தந்த நிர்வாகங்கள் தரக்கூடிய திருமண பதிவுச் சான்றை ஆதாரமாக கொண்டு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். 

அல்லது பாஸ்போர்ட் விதி முறைகளில் ஒன்றான கணவன் - மனைவி புகைப்படம் ஒட்டப் பட்ட உறுதி மொழி பத்திரத்தை (அபிடவிட்) ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும். 

திருமண சான்று பிரச்சினையால் பாஸ்போர்ட் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றோர் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து கொண்டிருக்கும் சூழ் நிலையை கருத்தில் கொண்டு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கைகளில் விதிமுறைகளை தளர்த்தி இதுதொடர்பாக உரிய உத்தரவை விரைந்து பிறப்பிக்க மத்திய வெளியுறவு விவாகரங்களுக்கான அமைச்சகத்தை வேண்டுகிறேன். 

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here