அக்டோபர் 04: சட்ட மீறலாகத் தங்கியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களை வெளியேற்றும் நோக்கில் சவூதி அரேபிய அரசு அறிவித்திருந்த நிபந்தனையற்றப் பொதுமன்னிப்புக் காலம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து,
சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களிடையே சோதனைகள் குறித்த கலவையான உணர்வுகள் தென்படுகின்றன.
சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரிசெய்து கொள்ள முயன்றாலும், கால அவகாசம் போதாமையாக இருப்பதாக சில வெளிநாட்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். (முதலில் நான்கு மாதங்களும், பின்னர் ஆறு மாதங்கள் நீட்டிப்பு என) இதன்பொருட்டு சுமார் 10 மாதக் கால பொதுமன்னிப்புக் காலம் கிடைத்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.
ரியாத்திலுள்ள நிறுவனங்கள் பலவும், உரிய ஆவணங்களைச் சரிசெய்துகொள்ள இயலாத தங்கள் ஊழியர்கள் யாரும பணிக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளன. ஒரு பெரும் கட்டுமான நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பணிக்கு வராததால், அவர்கள் அழைத்துவரும் களப் பணியாளர்களும் இன்றி பணிகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரபுப் புத்தாண்டு முஹர்ரம் 1 முதல் வெளிநாட்டவரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்ததால், முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர் அச்சம் கொண்டுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்கள் வராததையடுத்து அலுவலகங்களும், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகம் தனது ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளில்,"வெளிநாட்டுப் பணியாளாரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது; நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஊழியர் நலத்துறை அமைச்சகத்தில் சவூதியர் (ஆண்களும், பெண்களுமாக) ஆயிரக்கணக்கானோர் ஆய்வாளர்களாகப் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர் என்ற போதிலும், பெண் ஆய்வாளர்கள் வீடு புகுந்து ஆய்வு செய்வர் என்று கூறப்படுவதை ஊழியர் நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். இதுவரை சுமார் 10 இலட்சம் பேர், சட்டமீறலாகத் தங்கியிருந்தவர்கள், சவூதியை விட்டு வெளியாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். இத்தனை இலட்சம் பேர் வெளியாகியிருப்பதால் சவூதி அரேபியச் சந்தையில் அதன் தாக்கம் இருக்கலாம் என்று சவூதி அரேபிய நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது நிலையை சரி செய்துகொண்டனர். அந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இந்த ஆய்வுப்பணி இந்த ஆண்டு முழுவதும் நடைபெறும் என்றும், இந்த ஆய்வுக்கு கால வரம்பு எதுவும் இல்லை என்றும் உள்துறை அமைச்சக செயதித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு அனைத்து நகரங்கள், பிராந்தியங்கள் மறறும் கிராமங்களிலும், நாடு முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளிலும் நடைபெறும். நிடாகட் சட்டத்தை மிறுபவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கி நாடு கடத்தப்படுவார்கள்.
சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு வேலை கொடுத்த அல்லது அவர்களை வேறு வேலைக்கு செல்ல உதவி செய்யும் சவுதி நாட்டவர்கள் மீதும் இந்த ஆய்வின்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment