நவம்பர் 17: துபாயில் இன்று (17.11.2013) முதல் (21.11.2013) வரை 5 நாட்கள் விமான விற்பனைக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. துபாயில் இன்று துவங்கும் விமான விற்பனைக் கண்காட்சியில் விற்பனை ஆர்டர்களைப் பெறுவதில் ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. போயிங் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட நெடுந்தொலைவு விமானமான 777-எக்ஸ் வகையை அறிமுகப்படுத்துகின்றது. இதற்கு வளைகுடா விமான நிறுவனங்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைந்த அளவு எரிபொருள் நுகர்வு இயந்திரங்கள் மற்றும் கலப்பு இறக்கைகளுடன் பரந்த உடலமைப்பு கொண்ட இவ்வகை விமானங்கள் வரும் 2020 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரக்கூடும்.அப்போது,1990ல் அறிமுகப்படுத்தப்பட்ட 777க்கு மாற்றாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 1,473 விமானங்கள் இந்த வகையில் விற்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே புதிய அறிமுகத்தின் மீது நிறைய நிறுவனங்கள் விருப்பம் காட்டின. 400 பயணிகள் கொள்ளளவுடன் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வகை விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தின் வகைக்கு மாற்றாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
துபாய் நாட்டைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த வகை விமானங்களை அதிக அளவில் ஆர்டர் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.சென்ற மாதமே எமிரேட்ஸ் நிறுவனத் தலைவர் டிம் கிளார்க் இதுகுறித்த தனது ஆர்வத்தினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே போயிங்கின் கிளாசிக் 777 வகையை உபயோகப்படுத்துவதில் தனிப் பெரும்பான்மை கொண்டுள்ள எமிரேட்ஸ் நிறுவனம் இந்தப் புதிய வகையில் 100 முதல் 175 விமானங்கள் வரை வாங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் ஏர்பஸ் நிறுவனமும் வலுவான போராட்டத்தை அமைத்து வருவதாக இத்துறையின் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.இன்று ஏர்பஸ் நிறுவனத்திற்கு நல்ல விற்பனை கைகூடக்கூடும். அதனுடைய புதிய ஏ-350 மற்றும் நியோ மாதிரிகள் குறித்து அந்நிறுவனம் இன்று அறிவிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
துபாயில் நடைபெரும் இந்த விற்பனைக் கண்காட்சியே விமான வர்த்தகத்தின் மிகப்பெரிய விற்பனை சந்தையாகும். அதனால் அனைத்து விமானத் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று கிறிஸ்டோபர் மேனார்ட் என்ற வர்த்தக ஆய்வாளர் கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment