அரபா நோன்பின் மாண்புகள்.| - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, October 14

அரபா நோன்பின் மாண்புகள்.|


அக்டோபர் 14:

அரபா நோன்பின் மாண்புகள்
இந்தியா, இலங்கையில் அரபா தினம் நாளை 15-10-2013 நோன்பு கடைபிடிக்கபடுகிறது , அரபு நாடுகளில் இன்று 14-10-2013 நோன்பு கடைபிடிக்கப்பட்டது.
அரபா தினம்’ என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.
‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ (திருக்குர்ஆன் 5:3)
இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரபாதினத்தின் போதும் தான் இறங்கியது.
இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறும்போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை! நாங்கள் அப்போது அரபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: தாரிக்பின் ஷிஹாப் (ரஹ்) புகாரி: 4606)
‘அரபா தான் ஹஜ்’
ஹஜ் என்பதே அரபா (வில் தங்குவது) தான். துல்ஹஜ் பத்தாம் இரவில் அதிகாலைக்கு முன்பு ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால், அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி)
அரபாவில் எங்கே தங்கவேண்டும்?
அரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்கவேண்டும் என்பதில்லை. அரபா மைதானத்தின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் தங்கலாம். துல்ஹஜ் 9–ம் நாளின் அதிகாலை ‘சுபுஹ்’ எனும் தொழுகையை முடித்துவிட்டு, சூரியன் உதயமானபின்பு ‘மினா’ எனும் இடத்திலிருந்து அரபாவை நோக்கி புறப்படவேண்டும்.
அரபாவிற்கு வந்து சேர நண்பகலாக ஆகிவிடும். இந்த நண்பகலில் இருந்து மறுநாள் அதிகாலை வரைக்கும் எப்போது வேண்டுமானாலும் அரபாவில் தங்கினாலோ, அல்லது அரபா மைதானத்தை கடந்து சென்றாலோ புனித ஹஜ் நிறைவேறிவிடும். அரபாவில் இவ்வளவு நேரம்தான் தங்கவேண்டும் என்ற வரம்பு கிடையாது.
அரபாவில் என்ன செய்ய வேண்டும்?
அரபாவில் உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும், தாய் நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், மனித வளத்திற்காகவும், பசியிலிருந்து விடுதலை பெறவும், பயத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து நிவாரணம் பெறவும், கடனிலிருந்து நிம்மதி பெறவும், மனிதவளம் மேம்படவும், மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
மேலும் அரபாவில் நண்பகல் தொழுகையான ‘லுஹரையும்’ மாலை நேரத் தொழுகையான ‘அஸரையும்’ நண்பகலில் சேர்த்து தொழுதிட வேண்டும்.
‘நபி (ஸல்) அவர்கள் அரபா நாளில் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்) உங்களின் ரத்தங்களுக்கு உங்களின் செல்வங்களும் புனிதமானவை என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கூறி, தொழுகையில் நிற்பதற்குரிய வாசகம் (இகாமத்) கூறி லுஹர் தொழுது, பிறகு அஸரும் தொழுதார்கள்’ (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)
நான் அரபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: உஸாமா பின் ஸைத் (ரலி) நூல்: நஸயீ)
புனித ஹஜ்ஜிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் மக்கா நகரில் ஆங்காங்கே தங்கியிருந்து, குழு குழுவாக தங்களது ஹஜ் கடமைகளை ஆற்றுவார்கள். இவர்களுக்குப் பிறகு, பின் வரக்கூடியவர்கள், பின் வரக்கூடியவர்களுக்குப் பின் வருபவர்கள் என தொடர்ந்து வந்துகொண்டே இருப்பவர்கள் கடமையை ஆற்றிவிட்டு, பின் வரக்கூடியவர்களுக்கு இடமளிப்பார்கள்.
அரபாவைத் தவிர ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் யாரும் ஒன்று கூடமாட்டார்கள். அவரவர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டு, அடுத்த கடமைக்கு முன்னேறி விடுவார்.
உலகின் பல பாகங்கலிருந்தும் மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற தினம்தான் ‘அரபா தினம்’.
அன்றைய தினத்தில் ‘அரபா திடலில்’ அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம், பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை குழிதோண்டி புதைத்து, தீண்டாமையை வேரோடு சாய்த்து உலக ஒற்றுமையை நிலைநாட்டி வைக்கிறார்கள். உலக ஒற்றுமையை வலியுறுத்தும் உலக மகாநாடு அரபா தினத்தில், அரபா திடலில் நடை பெறுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
மக்காவும், அதன் சுற்றுப்புறமும் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதியாகவும், மகத்துவம் நிறைந்த பகுதியாகவும் இருந்துவரும் வேளையில் அரபா எனும் பகுதி ஆசீர்வதிக்கப்பட்ட, மகத்துவம் வழங்கப்பட்ட பகுதிக்கு அப்பால் இருக்கிறது. இதனால் அன்றைய அறியாமைகால அரபிகள் (குறைஷிகள்) தங்களுக்கு மற்ற அரபுகளை விடத் தனிச்சிறப்பு உண்டு. காரணம் புனித கஅபா நமது ஊரில் இருப்பதும், நாம் அதன் எல்லை வாசலில் இருப்பதும் தான் என கருதிவந்தனர்.
இதனால் அவர்கள் மக்களோடு மக்களாக அரபாவில் தங்காமல் ‘முஸ்தலிபா’ எனும் இடத்தில் தங்குவார்கள். காரணம் ‘முஸ்தலிபா’ புனித கஅபாவின் எல்லைக்கு உள்ளேயும், ‘அரபா’ புனித கஅபாவின் எல்லைக்கு வெளியேயும் இருப்பது தான்.
உயர் குலத்தவரான குறைஷிகள் மட்டும் புனித எல்லையில் தங்கிவிட்டு, அரபா என்பது ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக கருதி வந்தார்கள். இத்தகைய தீண்டாமைக் கொடுமையை இஸ்லாம் பின்வருமாறு ஒழித்துக்காட்டியது.
‘பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (அரபா எனும்) இடத்திலிருந்து திரும்பிவாருங்கள்’ (திருக்குர்ஆன் 2:199)
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும், அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிபாவிலேயே தங்கிவிடுவார்கள். (கஅபாவின் புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்) அவர்கள் (இந்த விஷயத்தில்) உறுதிமிக்கவர்கள் என பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரபாவில் தங்கி வந்தார்கள். இஸ்லாம் வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் 9–ம் நாளில்) அரபா சென்று, அங்கே தங்கியிருந்து விட்டு திரும்ப வேண்டும் என அல்லாஹ் (2:199 வது வசனத்தில்) கட்டளையிட்டான். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) புகாரி: 4520)
இஸ்லாத்தில் தீண்டாமைக்கு அணு அளவுகூட அனுமதி இல்லை என்பதை அரபா தினம் படம்பிடித்து காட்டுகிறது. பாடம் பெறுபவர்கள் பக்குவம் பெறலாம்! பயனை அடையலாம்!
அரபா நோன்பின் மாண்பு:
அரபா தினத்தில் ஹஜ்ஜிக்கு செல்லாதவர்கள் நோன்பு நோற்பது சிறப்பான வழிபாடாகும். புனித ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் அரபா தினத்தில் அதிகமதிகம் நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தேவையில்லை!
‘அரபா நாளின் நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்)
அரபா தினத்தை விட சிறந்தநாள் வேறெதுவும் கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்).
இந்த ஆண்டு அரபா தினம் 15–10–2013 அன்று வருகிறது.
–மவுலவி அ.செய்யது அலி,
பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here